ராகுல், அகிலேஷ் கொடும்பாவி எரிப்பு; சட்டென பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ-வுக்கு நேர்ந்த விபரீதம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் பா.ஜ.கவினர் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்வுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ அனுபமா ஜெய்ஸ்வால் என்பவர் தலைமை தாங்கினார். திரளான தொண்டர்கள் இதற்காக மாவட்ட நீதிபதி வீட்டிற்கு அருகில் கூடியிருந்தனர். கொடும்பாவியை தீவைப்பதற்கு முன்பு அங்கு பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அனுபமா கொடும்பாவிகளுக்கு தீவைத்தபோது தீ திடீரென அதிக வேகத்துடன் வெடிச்சத்தத்துடன் எரிந்தது. இதனால் தீ அனுபமா முகத்தில் பட்டது. அவரது நெற்றி அருகில் இருந்தமுடி தீயினால் கருகியது.
அருகில் இருந்த தொண்டர்கள் தண்ணீரில் கர்ச்சீப்பை நனைத்து அனுபமா முகத்தில் ஒத்தி எடுத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அனுபமா உடனே அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அனுபமாவின் நெற்றியில் நான்கு சதவிகிதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக அவரது கண்களில் பாதிப்பு ஏற்படவில்லை. தொண்டர்கள் அதிக அளவில் கொடும்பாவியில் பெட்ரோல் ஊற்றி இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் தீபற்றவைத்தவுடன் அனுபமாவின் முகத்தை நோக்கி தீ வந்ததாக கூறப்படுகிறது.
அனுபமா முகத்தை தொண்டர்கள் ஈரமான கர்ச்சீப்பால் துடைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி இருக்கிறது. கொடும்பாவியை எரிக்கப்போன இடத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ.தானே தீயில் கருகி இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் மாவட்ட மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து லக்னோ மருத்துவமனைக்கும் அனுபமா கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஆகியோர், இதுபோன்ற செயல்களைச் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். சமீபத்தில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0