பிங்க் யானை: ரஷ்யப் புகைப்படக் கலைஞரின் வைரல் 'கலை' முயற்சிக்குக் கிளம்பிய எதிர்ப்பு!

Mar 30, 2026 - 17:01
 0
பிங்க் யானை: ரஷ்யப் புகைப்படக் கலைஞரின் வைரல் 'கலை' முயற்சிக்குக் கிளம்பிய எதிர்ப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கலைத் திட்டம் என்ற பெயரில் யானை ஒன்றிற்கு அடர் இளஞ்சிவப்பு (Dark Pink) வண்ணம் தீட்டிப் புகைப்படம் எடுத்த ரஷ்யப் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவாவின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கலைப் பயணத்திற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த ஜூலியா புருலேவா போட்டோ ஷூட் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அந்தப் பகுதியின் வண்ணமயமான கலவையில் ஈர்க்கப்பட்ட அவர், அதை தன் கற்பனைக்கேற்றவாறு பதிவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஜூலியா புருலேவா, ``பாரம்பரிய ராஜஸ்தானி நுழைவாயில்களுக்கு மத்தியில் ஒரு இளஞ்சிவப்பு யானை என்பது எனது கற்பனை. ராஜஸ்தானின் அடையாளமான யானைகளை எனது கலைப் படத்தில் சேர்க்காமல் இருக்க முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக யானைப் பண்ணைகளுக்குப் பலமுறை சென்றது, உரிய அனுமதி பெற்றது எனக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவரின் திட்டத்தை நிறைவேற்ற பல மாடல்கள் மறுத்திருக்கின்றனர். அதையும் தாண்டி நீண்ட நாள்கள் காத்திருந்திருக்கிறார். அதன் பிறகே, யானைக்கு வண்ணம் பூசி போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அவரின் புகைப்படங்களில் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், யானைக்கு வண்ணம் பூசியது தொடர்பாக பலரும் ஜூலியா புருலேவாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இந்த விமர்சனம் குறித்து பேசிய ஜூலியா, ``யானை மீது நாங்கள் பயன்படுத்தியது உள்ளூர் மக்கள் திருவிழாக்களுக்குப் பயன்படுத்தும் இயற்கையான மற்றும் பாதுகாப்பான வண்ணங்கள்தான். இது அந்த விலங்கிற்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது." என விளக்கமளித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் விலங்கு நல ஆர்வலர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கலைஞர்கள் உள்ளூர் கலாசாரம் மற்றும் விலங்கு நல விதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0