பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

May 15, 2026 - 12:01
0
பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு சுமார் ரூ. 3 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (மே 15, வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98-க்கும், டீசல் ரூ. 95.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல்
பெட்ரோல்

எரிபொருள் விலை உயர்வுடன் சேர்த்து, சர்வதேச நெருக்கடியைக் காரணம் காட்டி CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான வரி வித்தியாசத்தைப் பொறுத்து, நாட்டின் பிற நகரங்களில் இந்த விலை உயர்வு லிட்டருக்கு ரூ. 2.83 முதல் ரூ. 3.29 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ(எம்) கட்சி எம்.பி சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு வன்மையான கண்டனம். சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 3.10 உயர்ந்து 103.90க்கும் டீசல் லிட்டருக்கு ரூ. 3.08 உயர்ந்து 95.47க்கும் விற்பனை ஆகிறது. ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலையுயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் லாபம் பார்த்த ஒன்றிய அரசு இப்போது விலையுயர்ந்தபோது அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்தியுள்ளது. இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது. தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு. உடனடியாக இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User