`மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' - விஜய்க்கு விசிக எம்.பி கோரிக்கை!

May 15, 2026 - 12:01
0
`மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' - விஜய்க்கு விசிக எம்.பி கோரிக்கை!

எடப்பாடி தலைமையில் ஒரு அணி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான ஒரு அணி என அதிமுக மீண்டும் பிளவுபட்டு இருக்கிறது.

இதில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்யின் த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தத் தரப்புக்கு த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விசிக எம்.பி ரவிக்குமார் `மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

``சமீபத்தில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற 25 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட குழு, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இத்தகைய செயல் அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கத்திற்கு உள்ளாகுமா? என்பது ஒரு தீவிரமான அரசியலமைப்பு கேள்வியாகும்.

மேலும், இவர்களில் சிலரை அமைச்சர்களாக நியமிக்க மாண்புமிகு முதலமைச்சர் பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தகைய நியமனங்கள் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதும் ஒரு முக்கியமான விவகாரமாகும்.

இதற்கான சட்டபூர்வ நிலையை பின்வருமாறு ஆராயலாம்

1. கொறடா (Whip) மற்றும் தகுதி நீக்கம்

தற்போதைய சூழலில், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு மட்டுமே கட்சியின் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. சுபாஷ் தேசாய் v. மகாராஷ்டிர மாநில அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த விதியைத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. நீதிமன்றம் பின்வருமாறு கூறியுள்ளது:

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

"சட்டமன்றக் கட்சி அல்ல, அரசியல் கட்சிதான் அவையில் கட்சியின் கொறடாவையும் தலைவரையும் நியமிக்கிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட முறையில் வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்ற உத்தரவை அரசியல் கட்சிதான் பிறப்பிக்கிறதே தவிர, சட்டமன்றக் கட்சி அல்ல."

எனவே, அதிமுக தலைமையால் பிறப்பிக்கப்பட்ட கொறடா உத்தரவு, அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். இந்த உத்தரவை மீறும் எந்தவொரு எம்.எல்.ஏ-வும் பத்தாவது அட்டவணையின் 2-வது பத்தியின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

2. அமைச்சர்களாக நியமித்தல்

அதே சமயம், பிரிந்து சென்ற அதிமுக குழுவின் சில உறுப்பினர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் அமைச்சர்களாக நியமிக்க விரும்பினால், அத்தகைய நியமனங்களுக்கு உடனடியாக அரசியலமைப்புத் தடை ஏதுமில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாவது:

"அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(1-B)-ன் படி, பத்தாவது அட்டவணையின் 2-வது பத்தியின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.எல்.சி அமைச்சராகப் பதவி வகிக்கத் தடை உள்ளது. ஆனால், இந்தத் தடையானது ஒரு சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்."

எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்
எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்

மேலும் நீதிமன்றம் குறிப்பிட்டதாவது:

"பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் கோரும் மனு சபாநாயகரின் பரிசீலனையில் இருக்கும்போது, ஒரு உறுப்பினரை அமைச்சராக நியமிப்பதற்கு பிரிவு 164(1-B) முட்டுக்கட்டை போடாது."

எனவே, சட்ட ரீதியாகப் பார்த்தால், தகுதி நீக்கம் செய்யப்படும் வரை அத்தகைய எம்.எல்.ஏ-க்களை அமைச்சர்களாக நியமிப்பது அனுமதிக்கப்படலாம். இருப்பினும், அரசியலமைப்பு அறநெறி மற்றும் ஜனநாயகப் பண்புகள் சார்ந்த விஷயங்களில் சட்டம் மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User