அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

May 15, 2026 - 12:01
0
அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``கொரடாவுக்கு எதிராக தவெக-வுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் சிலர் வாக்களித்தது கட்சிக்கு எதிரான பெரும் துரோகமாகும். பதவிக்காக தவெக பக்கம் சேர்ந்திருக்கிறார்கள். அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். ஆனால், பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்யக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கழகத்திற்குத் துரோகம் இழைத்துள்ளவர்கள், தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, என்மீது பல்வேறு அவதூறு கருத்துகளை, பழி பாவங்களைச் சுமத்தி வருகின்றனர். இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், எஸ்.பி.வேலுமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும்.

அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.

இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User