Peddi Review: அடையாளத்துக்காகக் களமிறங்கும் விளையாட்டு வீரன் - படமாகக் கோப்பையை வென்றதா?

Jun 05, 2026 - 21:32
0
Peddi Review: அடையாளத்துக்காகக் களமிறங்கும் விளையாட்டு வீரன் - படமாகக் கோப்பையை வென்றதா?
அரசாங்க ஏடுகளில் எந்தவித பெயர் கொண்டும் அச்சேறாமல் இருக்கும் தன்னுடைய மலைக் கிராமத்துக்கும், அதன் காரணமாக அடையாளமற்று, அடிப்படை வசதிகளற்றுக் கிடக்கிற தன் கிராம மக்களுக்கும் தன் விளையாட்டுத் திறமையால் அடையாளத்தைப் பெற்றுத்தரத் துடிக்கிற இளைஞனின் கனவு என்னவானது என்பதுதான் பெத்தி படத்தின் கதை.

விஜயநகரத்துக்கு அருகிலிருக்கிற ஒரு மலைத்தொடரில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கிற கிராமம் ஒன்றிருக்கிறது. மலையிலிருந்து வந்து தங்கி கூலி வேலை செய்கின்றனர் அந்த கிராம மக்கள். ஆனால், அதற்கேற்ற கூலி அந்த மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. காரணம் அரசியல் அடையாளங்களற்று இந்த அரசின் எந்த ஆவணங்களிலும் இடம்பெறாமல் இருப்பதுதான். வாக்குரிமையற்ற அந்த மக்களுக்குக் கல்வி, மருத்துவம், சாலை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்கப்பெறவில்லை. அந்த கிராமத்துக்கு மட்டுமன்றி விஜயநகரின் பல பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறான் அந்த கிராமத்தின் இளைஞன் கிரிக்கெட் வீரன் பெத்தி (ராம் சரண்).

Peddi Review
Peddi Review

கூலி வேலை செய்கிற பெத்தி, தன்னை ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிற அணிக்காகச் சென்று கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அவன் எந்த அணிக்காக விளையாடுகிறானோ அந்த அணியைத் தனது பேட்டிங் திறமையால் வெற்றி பெறச் செய்கிற அசகாய சூரன். அவனது விளையாட்டுத் திறமையைப் பார்த்து அவனது பாரம்பரிய மல்யுத்தப் போட்டிக்குப் பயிற்றுவிக்க அழைக்கிறார் அந்தப் பகுதியின் முன்னாள் மல்யுத்த வீரரும் பயிற்சியாளருமான கவுர் நாயுடு (சிவராஜ்குமார்). இதற்கிடையே பெத்திக்கு அச்சியம்மாவை (ஜான்வி கபூர்) கண்டதும் காதல்.

அதே நேரத்தில் காலம்காலமாக தங்கள் மலைக் கிராமத்துக்கு நடந்தே செல்கிற மக்களுக்கு, அந்த மலைத்தொடர் வழியாகச் செல்கிற ரயிலைக் கொண்டு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்கிற எண்ணத்தில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த அப்பள சூரி (ஜகபதி பாபு). விளையாட்டாகத் திரியும் பெத்தி, ஒரு கட்டத்தில் ஏற்படும் இழப்பால், தன் விளையாட்டாலேயே தன் கிராமத்துக்கு அடையாள்த்தைப் பெற்றுத் தரப் போராடுகிறான். அவனின் முயற்சிகள் என்னவாகின என்பதை லாஜிக்குகள் அற்ற கமர்சியல் மசாலா சினிமாவாக எடுத்திருக்கிறார் இயக்குநர் புச்சி பாபு சனா.

Jhanvi Kapoor - Peddi
Jhanvi Kapoor - Peddi

பெத்தியாக ராம் சரண், இறங்கி வந்து மூன்று கிரவுண்டுகள் தாண்டி அடிக்கிற சிக்ஸராக படம் முழுக்கப் பரபரத்திருக்கிறார். உடலை ஏற்றி இறக்கி, மல்யுத்த வீரனாகக் குஸ்தி போடுவது, மருத்துவமனையில் வருந்துவது, தன் மக்களுக்காக அனைத்தையும் இழந்து அலைவது எனப் பல எமோசனல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். ரயிலை விட நீளமாகச் செல்கிற திரைக்கதையின் தொய்வை தன் நடிப்பால் முடிந்த அளவுக்குக் காப்பாற்றியிருக்கிறார். அச்சியம்மாவாக நடித்திருக்கிற ஜான்வி கபூரைக் கவர்ச்சிக்காக மட்டுமே அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர். கதாநாயகிகளின் பணி கவர்ச்சி காட்டுவது என்கிற வழைமையான தெலுங்கு சினிமாவின் டெம்ப்ளேட்டில் தொடர்ந்து சிக்குண்டிருக்கும் ஜான்வியை இந்தப் படத்தில் அத்தனை அபாசமாகவும், அவரது கதாபாத்திரத்தை சுயமரியாதையற்றவராகவும் சித்திரித்திருக்கின்றனர்.

அப்பள சூரியாக நடித்திருக்கும் ஜகபதி பாபு தன் மக்களுக்காக எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் போராடுகிற பல தோழர்களை நினைவுபடுத்துகிறார். மல்யுத்த வீரனாக தன் ஊருக்குப் பெருமை சேர்த்து, பயிற்சியாளராக பெத்தியை உருவாக்குகிற கம்பீரமான பாத்திரத்தில் நடித்திருக்கும் சிவராஜ்குமார், அந்த பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். இவர்களைத் தவிர திவ்யந்து, விஜி சந்திரசேகர், போமன் இரானி என அனைவரும் தங்களுக்குக் கொடுத்த பாத்திரத்தைச் செய்திருக்கிறார்கள்.

தன் முதல் படமான `உப்பண்ணா' மூலம் கவனம் ஈர்த்த புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளிவருகிற இரண்டாவது படம். எளிய மக்களின் வாழ்வியலை, வலிகளை, அவர்களின் தேவையைப் பேசுகிற கதையைக் கையிலெடுத்து, அதைப் பிரமாண்டமான திரையனுபவமாக்க மெனக்கெட்டிருக்கிறார். `இந்த கதை புரியம்ணும்தான் சார் நடக்க வச்சு கூட்டிட்டு வந்தேன்', `அரசு தர்ற பதக்கமும் பதவியும் வேணாம். அடையாளம்தான் வேணும்' எனப் படத்தில் அவர் பேசியிருக்கிற விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.
பெத்தி | Peddi Review
பெத்தி | Peddi Review

அவரது மெனக்கெடலுக்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஓவர் டைம் வேலை பார்த்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் `சிக்ரி', `மசா மசா' பாடலும், பின்னணி இசையும் பிரமாண்டத்தைக் கொடுத்திருக்கிறது. அவினாஷ் கொல்லா வின் கலை இயக்கத்தில் கரும்பு ஆலை, கிரிக்கெட் போட்டி, மலைக்கிராமம் என பலவும் படத்துக்குப் பக்க பலமாக இருக்கின்றன. பிரமாண்டத்துக்காக இப்படி பலரும் உழைத்திருக்கிற படைப்பில், மலைத்தொடரில் ஏறுவதைவிட அதிக நேரம் பயணிக்கிற முதல் பாதியும், திக்கற்று ஓடுகிற இரண்டாம் பாதியும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேவையற்ற இரண்டாம் பாதியின் பாடல்கள், மலையைவிட உச்சமாக இருக்கிற மசாலா காட்சிகள் படத்துக்குப் பின்னடைவையே தந்திருக்கின்றன.

மொத்த படத்தையும் பிளாஷ்பேக்காக சொல்லும் ஐடியா சுவாரஸ்யம் என்றாலும் அந்த உரையாடலில் எல்லாம் வெற்று பில்டப்பே எஞ்சி நிற்கிறது. மேலும் இந்தியாவின் விளையாட்டு மேம்பாடு தொடர்பான முக்கிய பொறுப்பிலிருக்கும் ஒரு கதாபாத்திரத்துக்கு பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வென்ற ஒருவரைத் தெரியாமல் இருக்குமா? மூன்று விளையாட்டுகளை ஆடும் வீரர் என்ற வரைவு அட போடவைத்தாலும், அதை இன்னுமே லாஜிக்கான காட்சியமைப்புகளுடன் அணுகியிருக்கலாம். கிரிக்கெட், குஸ்தி, ஓட்டப்பந்தயம் என மூன்று விளையாட்டுகளையும் கொத்து புரோட்டா போட்ட உணர்வே எஞ்சி நிற்கிறது.

Peddi Review

நல்ல கதையைப் படமாக்குகிற இயக்குநர்கள், அதை வெறுமனே மசாலா படமாக மட்டும் அணுகாமல் உணர்வுபூர்வமான படைப்பாக அளிப்பது முக்கியம். நாயகிகளுக்கு எந்தவித அழுத்தமான கதாபாத்திரமும் இல்லாமல் வெறுமனே பாடல் காட்சிகளுக்கும், கவர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்துகிற யுக்தியையும் எப்போது கைவிடுவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

நல்லதொரு கதையைக் கையிலெடுத்த இயக்குநர் படத்தின் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கி, தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்திருந்தால் 'பெத்தி' ரசிக்க வைத்திருப்பான்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User