நள்ளிரவு விதி! மீண்டும் சர்ச்சையில் பென் ஸ்டோக்ஸ் - நைட் கிளப் தகராறால் பறிபோகுமா பதவி?

Jun 09, 2026 - 13:00
0
நள்ளிரவு விதி! மீண்டும் சர்ச்சையில் பென் ஸ்டோக்ஸ் - நைட் கிளப் தகராறால் பறிபோகுமா பதவி?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட, சக வீரர் கஸ் அட்கின்சனுடன் லண்டனில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றபோது ஏற்பட்ட தகராறால், அவரது கேப்டன் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) நள்ளிரவு விதியை மீறி இருவரும் செயல்பட்டதால், வாரியம் இதுகுறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்

நடந்தது என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிகளின்படி, வீரர்கள் நள்ளிரவுக்குப் பிறகு வெளியே இருக்கக் கூடாது. ஆனால், இந்த விதியை மீறி ஸ்டோக்ஸும், அட்கின்சனும் செல்சீயில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றுள்ளனர். அங்கு, இங்கிலாந்தின் முன்னணி ரக்பி கிளப்பான 'Saracens' அணியின் அகாடமி வீரர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.

டெலிகிராப் பத்திரிகை அறிக்கையின்படி, அந்த ரக்பி வீரர் அட்கின்சனைத் தாக்க முயன்றபோது, அது தவறுதலாக வீரர்களுடன் இருந்த ECB பாதுகாப்பு அதிகாரியின் மீது பட்டுள்ளது. இதில் காயமடைந்த அந்த அதிகாரிக்கு மருத்துவமனையில் தையல் போடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சனுக்கு இந்தச் சம்பவத்தில் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

ECB தீவிர விசாரணை!

இந்தச் சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. "பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் திங்கட்கிழமை அதிகாலையில் ஒரு நைட் கிளப்பில் இருந்தபோது ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்று ECB தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூன் 17 அன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ்

ஸ்டோக்ஸ் தரப்பு ஆக்ரோஷம் காட்டவில்லை!

இந்த மோதலில் ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் தரப்பில் ஆக்ரோஷம் காட்டப்படவில்லை என ECB வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளன. "இந்த பிரச்னைக்குக் காரணமே அந்த ரக்பி வீரர்தான். அவருக்கு ஏற்கெனவே இதுபோன்ற கெட்ட பெயர் இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து கேப்டன், தன் பதவியை இழப்பதை நான் விரும்பவில்லை" என ஒரு நபர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காவல்துறை தலையீடு தேவைப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. அப்போது, வீரர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாகவும், தொழில்முறையற்று நடந்துகொள்வதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன் பின்னரே வீரர்களுக்கு நள்ளிரவு விதி மீண்டும் அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த விதியை ஸ்டோக்ஸ் மீறியுள்ளதால், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஹாரி புரூக் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டோக்ஸ் தனது ஆக்ரோஷமான ஆட்டத்திற்கும், களத்தில் காட்டும் உணர்ச்சிகரமான தலைமைக்கும் பெயர் பெற்றவர். ஆனால், இதுபோன்ற சர்ச்சைகள் அவரது கிரிக்கெட் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User