மறைக்கப்பட்ட இந்தியர்களின் மரபணு ரகசியம்! அந்தமான் பழங்குடிகளின் 65000 ஆண்டு ரகசியத்தை உடைத்த தமிழர்
விஞ்ஞான உலகம் அதுவரை மனிதர்களின் இடப்பெயர்வு மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளை ஐரோப்பியர்களின் மரபணுக்களை மட்டுமே வைத்துத் தீர்மானித்து வந்தது. "அதில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது" என ஒற்றை ஆளாக நின்று சர்வதேச மேடைகளில் குரல் கொடுத்தவர் இவர். அந்தமானின் பூர்வகுடி மக்களிடம் இவர் நடத்திய டிஎன்ஏ ஆய்வுகள், மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றையே மாற்றி எழுதியுள்ளன.

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பத்ம ஸ்ரீ விருதுப் பட்டியலில், அறிவியல் மற்றும் பொறியியல் (Science and Engineering) துறையில் சாதித்த ஒரு தமிழர், சர்வதேச அறிவியல் உலகையே உற்றுநோக்க வைத்திருக்கிறார்! அவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மரபணுவியலாளர் டாக்டர் குமாரசாமி தங்கராஜ் (Dr. Kumaraswamy Thangaraj). ஆப்பிரிக்காவிற்கு வெளியே வாழும் மனிதர்களில், அந்தமான் பழங்குடியினரே உலகின் மிகப்பழமையான மரபணுத் தொடரைக் (Genetic Lineage) கொண்டுள்ளனர் என்பதை இவ்வுலகிற்கு ஆணித்தரமாக நிரூபித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) படித்து, இந்தியாவிலேயே தனது முழு ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சிடிஎஃப்டி (CDFD) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த அறிவியல் சாதனைகளுக்கு ஐவி லீக் (Ivy League) பட்டங்களோ, வெளிநாட்டு ஆய்வகங்களோ தேவையில்லை என்பதை தனது ஆராய்ச்சியின் மூலம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்
2005-ல் டாக்டர் தங்கராஜ் மற்றும் அவரது குழுவினர் 'சயின்ஸ்' (Science) இதழில் ஒரு மைல்கல் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அந்தமானின் ஓங்கே (Onge) மற்றும் ஜாரவா (Jarawa) பழங்குடியினரின் 'மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ'வை (Mitochondrial DNA) ஆய்வு செய்தபோது, அவர்கள் சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து முதன்முதலில் வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வம்சாவளியினர் என்பது கண்டறியப்பட்டது.

மேலும், இந்த ஆராய்ச்சியில் உலக மக்கள் தொகையினர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு இடப்பெயர்வுகள் மற்றும் கலப்புகளுக்கு உள்ளானபோது, இந்த அந்தமான் பழங்குடியினர் தங்களைச் சமூகம் மற்றும் புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்திக் கொண்டு, மனிதகுலத்தின் மிகப்பழமையான மரபணுவைப் பாதுகாத்து வந்துள்ளனர் என்றும் இது மனிதகுல வரலாற்றின் 'தெற்கு கடற்கரை இடப்பெயர்வு' (Southern Coastal Migration) கோட்பாட்டிற்கு வலுவான சான்றாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை உலகளாவிய மரபணு தரவுத்தளங்கள் (DNA Databases) பெரும்பாலும் ஐரோப்பியர்களை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தன. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் மரபணுக்கள் புறக்கணிக்கப்பட்டதால், உலகளாவிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் இந்தியர்களுக்கு முழுமையாகப் பொருந்தவில்லை.
இதனை மாற்றியமைக்க வந்த 'ஜீனோம் இந்தியா' திட்டம் அண்மையில் 9,768 இந்தியர்களின் மரபணுக்களை ஆய்வு செய்தது. அதில் கண்டறியப்பட்ட 130 மில்லியன் மரபணு மாறுபாடுகளில், சுமார் 44 மில்லியனுக்கும் அதிகமானவை உலகத் தரவுத்தளங்களிலேயே இல்லாதவை! டாக்டர் தங்கராஜ் பல ஆண்டுகளாகக் கூறி வந்த "இந்திய மரபணுக்கள் தனித்துவமானவை" என்ற கூற்றை இம்முடிவுகள் நிரூபித்துள்ளன. இந்தத் தரவுகள் இந்தியர்களுக்கான பிரத்யேக நோய் தடுப்பு முறைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்திற்கு (Personalised Medicine) வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
மறுபுறம், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தற்போது உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை என்றாலும், மனித வரலாற்றின் ஆதிப் புள்ளியாக இருக்கும் இப்பகுதியின் சூழலியலையும், பழங்குடிகளையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவை உலக அறிவியல் வரைபடத்தில் வெறும் தரவு வழங்கும் நாடாகப் பார்க்காமல், மனித பரிணாம வளர்ச்சியின் மையப்புள்ளியாக மாற்றிய பெருமை இந்த தமிழ் விஞ்ஞானியையே சேரும் என்பதைத் தன் உழைப்பால் நிருபித்துள்ளார் பத்மஸ்ரீ டாக்டர் குமாரசாமி தங்கராஜ்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)