மரணத்தையும் கொண்டாடும் மெக்சிகோ: ‘Day of the Dead’! - இறந்தவர்களை வரவேற்கும் திருவிழா!
மரணம் என்றாலே துக்கம் மட்டும்தானா? மறைந்தவர்களை நினைத்து மகிழவும் முடியுமா? இதற்கான பதில்தான் மெக்சிகோவின் ‘Day of the Dead’ திருவிழா.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் இத்திருவிழா, மறைந்தவர்களை நினைவுகூரும் ஒரு பாரம்பர்யக் கொண்டாட்டம். ஸ்பானியர்களின் வருகைக்கு முந்தைய பூர்வகுடி மக்களின் மரபுகளும் கத்தோலிக்கக் கிறிஸ்தவ வழக்கங்களும் இதில் கலந்துள்ளன. இந்த நாட்களில் மறைந்தவர்களின் ஆன்மாக்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்கத் திரும்பி வருவதாகப் பலர் நம்புகின்றனர்.

வீடுகளில் மறைந்தவர்களின் புகைப்படங்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகள், மெழுகுவர்த்திகள், மலர்கள் ஆகியவற்றை வைத்து Ofrenda எனப்படும் நினைவுப் பீடங்களை அமைக்கிறார்கள். ஆரஞ்சு நிற Cempasúchil மலர்கள், வண்ணமயமான சர்க்கரை மண்டையோடுகள் (Sugar Skulls), Pan de Muerto எனப்படும் பாரம்பரிய ரொட்டி ஆகியவையும் இத்திருவிழாவின் முக்கிய அடையாளங்கள்.
குடும்பத்தினர் கல்லறைகளை அலங்கரிக்கிறார்கள், ஒன்றாக உணவருந்துகிறார்கள், மறைந்தவர்களுடன் பகிர்ந்துகொண்ட நினைவுகளைப் பேசுகிறார்கள். இப்படி, மறைந்தவர்களின் நினைவுகளைத் தங்களுடன் தொடர்ந்து வாழச் செய்கிறார்கள்.
2008-ஆம் ஆண்டு, யுனெஸ்கோ இத்திருவிழாவை மனிதகுலத்தின் அருவப் பண்பாட்டு மரபுப் பட்டியலில் சேர்த்தது.
Halloween vs Day of the Dead
இரண்டு திருவிழாக்களிலும் மண்டையோடு போன்ற உருவங்கள் இடம்பெறுவதால், பலரும் இவற்றை ஒன்றாகக் கருதுகிறார்கள். ஆனால், Halloween-ல் வேடங்கள், அலங்காரங்கள், இனிப்புகள் சேகரித்தல் போன்றவை முக்கியம். Day of the Dead-ன் நோக்கமோ மறைந்தவர்களை அன்புடன் நினைவுகூர்வது.










நம் மரபிலும் இதே உணர்வு!
ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாள்களில் முன்னோர்களை நினைவுகூரும் வழக்கம் தமிழர்களிடமும் இருக்கிறது. சடங்குகள் வேறுபட்டாலும், நம்மை விட்டுப் பிரிந்தவர்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பது இரு பண்பாடுகளிலும் காணப்படும் பொதுவான உணர்வு.
மரணம் ஒருவரின் உடல் இருப்பை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால், அவர்களுடன் பகிர்ந்த அன்பும் நினைவுகளும் தொடர்ந்து வாழ்கின்றன என்பதை இத்திருவிழா உணர்த்துகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)