இத்தாலியில் மெலோனிக்கு மோடி பரிசளித்த Melody சாக்லேட்... ஏன் இந்தியா முழுக்க ‘Out of Stock’?

May 21, 2026 - 18:01
0
இத்தாலியில் மெலோனிக்கு மோடி பரிசளித்த Melody சாக்லேட்... ஏன் இந்தியா முழுக்க ‘Out of Stock’?

இத்தாலி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவில் பிரபலமான பார்லே (Parle) நிறுவனத்தின் 'மெலோடி' (Melody) சாக்லேட்டைப் பரிசளித்தார். இந்த வீடியோவை மெலோனி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட, வேகமாக வைரலானது.

ஏற்கெனவே மோடி மற்றும் மெலோனியின் பெயர்களை இணைத்து 'Melodi' என சமூக வலைதளங்களில் பதிவுகள் வந்த நிலையில், இந்தப் பரிசளிப்பு மேலும் கவனம் பெற்றது.

Modi Gifted Melody chocolate

இத்தாலியில் மோடி பரிசளித்த நிகழ்வின் தொடர்ச்சியாக இந்தியாவில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது ஒருபுறம், மற்றொரு புறம் Parle பெயருடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயர்ந்தன. சாக்லேட்டைத் தயாரிப்பது பார்லே புராடெக்ஸ் என்ற நிறுவனம்.

ஆனால் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம். ஆனால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் Parle Industries என்ற ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வரும் நிறுவனப் பங்குகளை வாங்கியதால், அதன் பங்கு 5 சதவிகிதம் வரை உயர்ந்தது.

பங்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்க, மற்றொரு புறம் மெலோடி சாக்லேட்டை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக இந்த சாக்லேட்டுக்கு அதிக தேவை ஏற்பட்டு Zepto, Blinkit, Instamart போன்ற டெலிவரி ஆப்களில் பல இடங்களில் அவுட் 'ஆஃப் ஸ்டாக்' ஆனது.

Online Delivery

இதுபற்றிய பேசிய பார்லே நிறுவனத்தின் துணைத் தலைவர் மயங்க் ஷா, "நாடு முழுவதும் Melody சாக்லேட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் விநியோகஸ்தர்களிடம் கூடுதல் ஸ்டாக் அனுப்புமாறு கூறியுள்ளோம்” என்றார். இந்நிலையில் உற்பத்தியையும் அதிகரிக்கவும் திட்டமுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெலோடி சாக்லேட்டை வாங்குவதில் ஏன் இத்தனை ஆர்வம் என்பதன் பின்னால் சில உளவியல் காரணங்கள் உள்ளன என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

டிரெண்டில் பங்கேற்க...

இணையத்தில் கடந்த சில வருடங்களாகவே மோடி மற்றும் மெலோனி இருவரையும் இணைத்த #Melodi ஹேஷ்டேக் மிகவும் பிரபலம். பிரதமர் மோடியே இந்த ஹேஷ்டேக் டிரெண்டை அங்கீகரிப்பதுபோல, மெலோடி சாக்லேட்டை பரிசளித்ததும், மக்கள் மனதில் அது ஓர் இனம்புரியாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தாங்களும் இந்த டிரெண்டில் பங்கேற்க விரும்பி சாக்லேட்டை ஆர்டர் செய்கின்றனர்.

நாஸ்டாலஜியா!

நாஸ்டாலஜியா!

1983-ல் இந்த மெலோடி சாக்லேட்டை பார்லே நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 80ஸ், 90ஸ் கிட்ஸ் பலரின் குழந்தைப் பருவத்தின் நினைவுகளுடன் இணைந்த ஒன்றாக நிச்சயம் இருந்திருக்கும். இத்தாலி பிரதமரின் போஸ்ட் வைரல் ஆனதும் பலருக்கும் குழந்தைப் பருவ நினைவுகள் கிளறப்பட்டிருக்கும். இதனால் அதை மீண்டு்ம் வாங்கி சாப்பிட்டுப் பார்க்க ஆசைப்பட்டிருப்பார்கள்.

செலிபிரிட்டிகளின் தாக்கம்...

ஒரு சாதாரண பொருளை ஒரு பிரபலம் பயன்படுத்தினால் அல்லது பரிசளித்தால் அது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அந்தப் பொருளுக்கு திடீரென ஒரு முக்கியத்துவம் உருவாகிறது. பிரதமரே இதை பரிசளித்திருக்கிறார் என்றால் அதில் ஏதோ ஸ்பெஷல் இருக்கும் என்ற மனநிலை ஏற்படும். இதை 'செலிபிரிட்டி பயாஸ்' (Celebrity Bias) என்கிறார்கள். பொதுவாகவே மனித மூளை குறுக்குவழிகளைத் தேடும். ஒரு விஷயத்தை தனியாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்குப் பதிலாக, நம்பகமான ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்கிறார்கள், ஒரு பொருளை பயன்படுத்துகிறார் என்றால், அது சரியானது என முடிவுசெய்து அதையே பின்பற்றிவிடும்.

parle Melody

உடனடி திருப்தி...

விலை உயர்ந்த ஒரு பொருளை மோடி பரிசளித்திருந்தால், அதை சாமானியர்களால் உடனடியாக வாங்க முடியாது என்பதால், அதைப் பெரிதுபடுத்தியிருக்கமாட்டார்கள். இது சாமானியர்கள் வாங்கக்கூடிய பொருள் என்பதாலும், டெலிவரி ஆப்களில் ஆர்டர் போட்டால் அடுத்த பத்து நிமிடங்களில் கைகளில் கிடைத்துவிடும் என்பதாலும் அதிகமானோர் ஆர்டர் செய்துள்ளனர்.

தூண்டுதல்

சமூக வலைதளங்களில் மெலோடி சாக்லேட் பற்றிய பதிவுகள், ரீல்ஸ் குவியத் தொடங்கியதும், நாமும் வாங்கி, அதை போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ், ரீல்ஸ் போட்டுவிட வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும். ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும்போது, எல்லோரும் அதைச் செய்கிறார்கள், நாம் மட்டும் செய்யாமல் விட்டுவிடுவோமோ என்ற பயம் (Fear Of Missing Out -FOMO) இயல்பாகவே ஏற்படும்.

parle Melody

பற்றாக்குறை பயம்

ஒரு பொருள் சந்தையில் மிகக் குறைவாக இருக்கிறது அல்லது தீரப்போகிறது என்று தெரிந்தால், அதன் மீதான மதிப்பு மக்களின் மனதில் உயர்ந்துவிடும். இனி மெலோடி சாக்லேட் கிடைக்காதா என்று பயந்து, தேவை இல்லாதவர்கள் கூட அவசர அவசரமாக வாங்கத் (Panicked Buying) தொடங்குவார்கள். பலர் இதுபோல செய்யததும் சாக்லேட் 'அவுட் ஆஃப் ஸ்டாக்' ஆகியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User