கோவையில் டாஸ்மாக் மூடலால் கல்லா கட்டும் FL 2 பார்! - சட்ட சிக்கலை தவிர்க்க நூதன முயற்சி? | Exclusive

May 21, 2026 - 18:01
0
கோவையில் டாஸ்மாக் மூடலால் கல்லா கட்டும் FL 2 பார்! - சட்ட சிக்கலை தவிர்க்க நூதன முயற்சி? | Exclusive

த.வெ.க. அரசு பொறுப்பேற்ற உடன் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையிலும், அதற்கு மிக அருகிலேயே இருக்கும் ‘எஃப்.எல்.-2’ பார்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

கோவை மாவட்டத்தில் மொத்தமிருந்த 284 டாஸ்மாக் மதுபானக்கடைகளில், பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் விதிமுறைக்கு உட்பட்ட 69 கடைகள் மூடப்பட்டன. அதேசமயம் ரத்தினபுரி, புலியகுளம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குள் 500 மீட்டருக்குள் இருக்கும் ‘எஃப்.எல்.-2’ பார்கள் மூடப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் அந்த பார்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

எஃப்.எல்.-2 என்பது "Non-Proprietary Club" நடத்துபவர்களுக்கு வழங்கப்படும் உரிமம். இந்த உரிமம் மூலம் கழகத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வழங்கலாம்.

எளிமையாக சொன்னால், பொது மக்களுக்கு மது வகைகள் வழங்க முடியாது், members-only club போல் இயங்கும் இடங்களுக்கு மட்டுமே இந்த உரிமம் பொருந்தும்.

எஃப்.எல்.-2 பார்கள்
எஃப்.எல்.-2 பார்கள்

இந்த நிலையில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதால் வரும் சட்ட சிக்கலை தவிர்க்க, புலியகுளம் பகுதியில் உள்ள ’சன்ரைஸ் கிளப்’ என்ற ‘எப்.எல்.-2’ பார் ஒரு நூதன முயற்சியை செய்து வருகிறது.

இதன்படி உறுப்பினர் அல்லாத மதுப்பிரியர்களிடம் ஆதார் அட்டை அல்லது டிரைவிங் லைசன்ஸ் ஜெராக்ஸ் பெற்றுக் கொண்டு, ‘FOR சன்ரைஸ் கிளப் கோவை’ என்ற முத்திரை வைக்கப்பட்ட ஒரு டோக்கன் அந்த பார் ஊழியர்கள் தருகிறார்கள். அதனை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

ஒருவேளை அந்த துண்டு சீட்டு தொலைந்து விட்டால் மீண்டும் ஆதார் அல்லது லைசன்ஸ் ஜெராக்ஸ் தந்து, மீண்டும் டோக்கன் பெற வேண்டும் என கூறியுள்ளனர். இந்த பகுதியில் இருந்த 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மதுப்பிரியர்களும் இந்த பாரில் ஜெராக்ஸ் தந்து டோக்கன் பெற்று மதுபானங்களை பெற்று செல்கின்றனர்.

எப்.எல்.-2 பார்கள்
எப்.எல்.-2 பார்கள்

இது குறித்து வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, “எஃப்.எல்.-2 என்ற தனியார் மனமகிழ் மன்றங்கள் மதுபானங்கள் வழங்கும் உரிமம் பெற்றுள்ளன. இந்த உரிமம் பெற்ற மன்றங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி உள்ளது.

த.வெ.க. அரசு டாஸ்மாக் கடைகளை மூடியதால், எஃப்.எல்.-2 பார்களுக்கு அதிகளவிலான மதுப்பிரியர்கள் செல்கின்றனர். இதனால் ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் நடவடிக்கைகளை தவிர்க்க அடையாள அட்டை ஜெராக்ஸ் பெற்று, டோக்கன் தருகிறார்கள். யாராவது வழக்கிற்கு சென்றால், எங்களது உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கினோம் என நிரூபிக்க இந்த நூதன முயற்சியை செய்கிறார்கள்” என்றனர்.

எஃப்.எல்.-2 பார்கள்
எஃப்.எல்.-2 பார்கள்

இது குறித்து அந்த பார் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, “தற்போது பெயரளவிற்கு தான் டோக்கன் தருகிறோம். போதையில் அவர்கள் அதை தொலைத்தாலும், மீண்டும் அடையாள அட்டை ஜெராக்ஸ் தந்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் அவர்களுக்கு துண்டு சீட்டிற்கு பதிலாக பிளாஸ்டிக் கார்டு தர உள்ளோம். இதை பெரிதுபடுத்த வேண்டாம்” என்றனர்.

சட்டத்தை தங்களது வசதிக்கு ஏற்ப வளைக்கும் இதுபோன்ற ’எஃப்.எல்-2’ பார்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User