Meesaya Murukku 2: "'என்னை அப்பானு கூப்பிடுற உரிமை உனக்கு இருக்கு'னு தேவா சார் சொன்னார்"- HipHop ஆதி
ஹிப் ஹாப் தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகியோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் சக்சஸ் மீட், நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் கானா கலைஞர்களுக்காக 'கானா கேங்' என்கிற தளத்தையும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடங்கியிருக்கிறார்.

அவர், "இந்தப் படத்தை நான் தேவா சாருக்குப் போட்டுக் காட்டியபோது, அவர் என்னைக் கட்டிப்பிடித்து இரண்டு நிமிடங்கள் அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தார்.
ஒரு கலைஞனாக இந்தக் கலை பற்றிச் சொல்ல நினைத்த எனக்கு, அந்தக் கானா கலையை கரையிலிருந்து திரைக்குக் கொண்டு சென்ற மாபெரும் கலைஞன் கட்டிப்பிடித்து முத்தமிட்டபோதே, இந்தப் படத்தை எடுத்ததற்கான முழு நிறைவும் அங்கீகாரமும் எனக்குக் கிடைத்துவிட்டது.
படம் முடிந்ததுமே அவர் என்னிடம், 'என்னை சார், ஐயான்னு கூப்பிடக் கூடாது. 'அப்பா'ன்னே கூப்பிடலாம், அந்த உரிமை உனக்கு இருக்கு'னு சொன்னாரு.
அதைவிடப் பெரிய அங்கீகாரம் எனக்கு வேறெதுவும் இல்லை. இன்றைக்கு கானாவைப் பற்றி நாங்க ஒரு படம் எடுக்கிறோம் என்றால், அது தேவா சார் இல்லாமல் முழுமையடையாது.
அவர்தான் கானா இசையை திரைக்குக் கொண்டு வந்து நிறுத்தியவர். அதனால், இப்போது வளர்ந்து வரும் கானா கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான ஆல்பங்களை உருவாக்கி, அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு தளமாக 'கானா கேங்' என்ற முயற்சியைத் தொடங்க முடிவு செய்தோம்.

அதைத்தான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸிலும் வைத்திருந்தோம். இந்தப் படத்தின் வெற்றிதான், அதனை படத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், நடைமுறையிலும் அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற தாக்கத்தை உருவாக்கியது.
இன்றைக்கு இந்த மேடையில் தேவா சார் இருக்கிறார். அவர் முன்னிலையில், இந்த 'கானா கேங்' அமைப்பின் முதல் நான்கு கானா கலைஞர்களை அவர் அறிவித்து ரிலீஸ் செய்வதுதான், இந்த சக்சஸ் மீட்டின் மிக முக்கியமான மற்றும் சிறப்பு அம்சமாகும்." எனப் பேசியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)