Meesaya Murukku 2: "நானே அவரை 'ஆதி அண்ணா'ன்னுதான் கூப்பிடணும் போல" - சுந்தர்.சி கலகல

Sep 30, 2026 - 13:30
0
Meesaya Murukku 2: "நானே அவரை 'ஆதி அண்ணா'ன்னுதான் கூப்பிடணும் போல" - சுந்தர்.சி கலகல

'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகியோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் சக்சஸ் மீட், நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

‘மீசைய முறுக்கு 2’
‘மீசைய முறுக்கு 2’

இந்த நிகழ்வில் இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சுந்தர்.சி பேசுகையில், "கிட்டத்தட்ட 13, 14 வருஷத்துக்கு முன்னாடி, ஒரே ஒரு சுயாதீன பாடலுக்காக சென்னைக்கு வந்த ஓர் இளைஞன், இன்னைக்கு நாடே போற்றும் அளவுக்கு ஒரு ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.

எல்லாரும் அவரை ‘ஆதி அண்ணா’ன்னு கூப்பிடுறதைப் பார்த்தா, போற போக்குல நானே அவரை 'ஆதி அண்ணா'ன்னுதான் கூப்பிடணும் போல இருக்கு (சிரித்துக்கொண்டே...).

அந்த அளவுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாம, தமிழ்ப் படங்கள் திரையிடப்படுற உலகத்தின் அத்தனை திரையரங்குகளிலும் 'ஆதி அண்ணா'ங்கிற கோஷம் ஒலிச்சுட்டு இருக்கு. என் தம்பியோட இந்த வளர்ச்சியைப் பார்த்து நான் படுற பெருமை, ஒரு தாய் அடையற மகிழ்ச்சிக்கு எந்த விதத்திலும் குறைஞ்சது இல்லை.

'மீசைய முறுக்கு' முதல் பாகம் ஆரம்பிக்கும்போது, அது இவ்வளவு பெரிய படமாக மாறும்னு நானும் எதிர்பார்க்கல, ஆதியும் அதை எதிர்பார்க்கல. தான் பட்ட கஷ்டத்தையும், ஜெயிச்ச கதையையும் சொன்னா அது பலருக்கு ஒரு தன்னம்பிக்கையா இருக்கும்ங்கிற ஒரே எண்ணத்துலதான் ஆதி அந்தப் படத்தையே ஆரம்பிச்சார்.

பெரிய ஹீரோவாகணும், பெரிய டைரக்டராகணும்ன்ற எண்ணமெல்லாம் அப்போ அவருக்கு இல்லை. ஒரு சுயாதீன இசைக்கலைஞனின் வெற்றிப் பயணத்தைச் சொல்ற ஒரு பயோபிக்கா ரொம்பச் சின்னதா தொடங்கின படம் அது.

ஆனா, அது மிகப்பெரிய வெற்றிப் படமா அமைந்து, தயாரிப்பாளரா எங்களுக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. 'மீசைய முறுக்கு 2' படம், அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக உருவானது. ஆரம்பத்துல இது 2-ம் பாகத்துக்கான எண்ணமா இல்லை.

சுந்தர் சி
சுந்தர் சி

மூணு தலைமுறையோட கதையா, சமூகத்துல இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்குற கானா இசைக்கலைஞர்களைப் பத்தின கதையா பண்ணணும்ன்றதுதான் ஆதியோட மனசுல இருந்தது. இது ஏதோ ஒரே இரவுல உட்கார்ந்து யோசிச்ச கதை இல்லை.

பல கானா கலைஞர்களை நேர்ல சந்திச்சு, அவங்களோட கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு உணர்ந்து, மிகப்பெரிய ரிசர்ச் பண்ணி உருவாக்கப்பட்ட கதை. 'ஒரு ஐடியாவா இப்படி இருக்குண்ணே'னு என்கிட்ட இதன் கதையைச் சொன்னாரு.

நான் இதுவரைக்கும் ஆதி கேட்ட எதுக்கும் மறுப்போ, எதிர்க்கருத்தோ சொன்னதே இல்லை. 'தம்பி, உனக்குப் பிடிச்சிருந்தா தாராளமா பண்ணலாம்'னு சொன்னேன். அப்படித் தொடங்கினதுதான் இந்த 'மீசைய முறுக்கு 2'" எனப் பகிர்ந்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User