மதுரை மத்தி: "அறியாமைக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

Apr 7, 2026 - 09:01
 0
மதுரை மத்தி: "அறியாமைக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராகக் களமிறங்கி இருக்கும் நிலையில், அதே தொகுதியில் தி.மு.க சார்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார்.

நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, ``ஒரு அரசு மீண்டும் தேர்தலில் நிற்கும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தது என்பதைச் சொல்வதுதான் மிக முக்கியம்.

கல்வி, நல்வாழ்வு, தொழில்மயமாக்கல் மற்றும் ஏற்றுமதி என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், முந்தைய 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் சராசரி வளர்ச்சியை விட (CAGR), இந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியின் வளர்ச்சி விகிதம் மிகச் சிறப்பாகவும், வரலாற்றுச் சாதனையாகவும் உள்ளது.

சுந்தர் சி
சுந்தர் சி

இதுதவிர இந்த முறை கூட்டணி முன்பை விட பலமடைந்துள்ளது. கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்ற முக்கியப் புள்ளிகள் இப்போது தி.மு.க கூட்டணியில் இருக்கின்றனர்.

கடந்த முறை எனக்கு எதிராக நின்று 10% வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் நண்பர்கள், எஸ்.டி.பி.ஐ மாவட்டச் செயலாளர், மற்றும் தே.மு.தி.க நிர்வாகிகள் எனப் பலரும் இன்று எங்களோடு கைகோர்த்துள்ளனர்.

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் போன்றோரும் இன்று எங்களுடன் இணைந்துள்ளதால், இது ஒரு வெற்றிப் பேரியக்கமாக மாறியுள்ளது.

கடந்த முறை நான் அறிவித்த திட்டங்களின் தொடர்ச்சியாக, இந்த முறை மதுரையின் வளர்ச்சிக்கெனப் பிரத்யேகமான மற்றும் குறிப்பான சில திட்டங்களை மக்கள் முன் வைக்கப்போகிறேன்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

எதிர்க்கட்சிகனர், வெளியூரிலிருந்து வந்தவர்களெல்லாம் எதையாவது பேசிவிட்டுச் செல்லட்டும். அவர்களின் அறியாமைக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உள்ளூர் மக்களுக்கும், களத்தில் இருக்கும் செய்தியாளர்களுக்கும் உண்மை என்ன என்பது நன்றாகவே தெரியும். மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எனது பணி" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0