மதுராந்தகம்: 'தவெகவின் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவிய பாமக?' - களத்தில் என்ன நடந்தது?
இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் தவெக வென்றிருக்கிறது. இதில் மதுராந்தகம் தொகுதியை தவெக வெல்ல பாமகவின் நிலைப்பாடு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகத்தில் தவெகவுக்கு பாமக எப்படி உதவியது?

மதுராந்தகம் தொகுதி தனித் தொகுதியில், கணிசமான அளவுக்கு வன்னிய சமூக மக்களின் வாக்குகள் இருக்கிறது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுக இல்லாத என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிட்டிருந்தது. அப்போது காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக இந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குள் மட்டும் 10% வாக்குகளை வாங்கியிருந்தது. ஆக, இதை நாம் தொகுதிக்குள் பாமகவின் தனிப்பட்ட செல்வாக்கு என எடுத்துக் கொள்ள முடியும்.
.jpg)
பாமகவின் இந்த 10% வாக்குகள் எப்போதுமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றன. பாமகவுடன் கூட்டணி வைத்து அதிமுக களமிறங்கிய 2021, 2026 சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டிலுமே மதுராந்தகத்தை அதிமுகவே கைப்பற்றியது. அதனால் இந்த இடைத்தேர்தலிலும் பாமகவின் ஆதரவு யாருக்குச் செல்லப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதிமுக பாமகவின் ஆதரவை நாடியதாக தகவல் வெளியான போதும், பாமக தங்களின் ஆதரவை அதிமுகவுக்குக் கொடுக்கவில்லை. திமுகவும் பாமகவின் ஆதரவை எதிர்பார்த்தது. ஆனால், பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்தது.
யாருக்கும் ஆதரவு இல்லை என்கிற இந்த நிலைப்பாடு தவெகவுக்குச் சாதகமாகவே முடிந்திருக்கிறது. தவெகவின் அமைச்சரவையில் விசிக இருக்கிறது.
வட மாவட்டங்களில் விசிகவும் பாமகவும் எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றன. ஆனால், விசிகவைத் தங்கள் பக்கம் வைத்துக் கொண்டே தவெக, பாமகவுடனும் உறவாடியது. அன்புமணியும் சௌமியாவும் தலைமைச் செயலகத்துக்கே நேரில் வந்து அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டியிருந்தனர். சௌமியாவின் அப்பாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் தவெக சட்டமன்றத்தில் அறிவிக்க அதை பாமக வரவேற்றது. இப்படியாக ஒரு பக்கம் தவெக, பாமகவையும் நட்பு சக்தி என்கிற அந்தஸ்திலேயே வைத்திருந்தது. இருதரப்பும் காட்டிய இந்த நெருக்கமும் மதுராந்தகத்தில் வன்னிய சமூக வாக்குகள் தவெக நோக்கி திரும்பக் காரணமாக இருந்தது.
வன்னிய சமூக வாக்குகளை ஈர்க்க தவெகவும் கொஞ்சம் விவரமாக வேலை பார்த்தது. பிரசாரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாமக, தவெகவின் அமைச்சரவையில் இணையப் போவதாக ஒரு செய்தி வெளியாக, அதை ஐ.டி.விங் மூலம் தீவிரமாகப் பரப்பியது தவெக.
அதேமாதிரி, பிரசாரத்திலும் பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தவெகவில் 18 வன்னிய அமைச்சர்கள் இருப்பதாகப் பல இடங்களில் பேசினார். கூடவே சாதிவாரிக் கணக்கெடுப்பை ஸ்டாலினால் செய்ய முடியவில்லை. அதை முதல்வர் விஜய்தான் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் என அழுத்தி அழுத்தி பேசினார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பைதான் 2026 தேர்தலின் மையப் பிரச்னையாக பாமக முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
பாமக, தவெகவோடு நேரடியாக கூட்டணி வைக்கவில்லை, நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், தவெகவும் பாமகவும் நட்புசக்திதான் என்கிற மெசேஜைச் சூசகமாகப் பரவவிட்டனர். அது மதுராந்தகத்தில் தவெகவின் வெற்றிக்குப் பெரியளவில் உதவியிருக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)