`அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸா?' – எலான் மஸ்கின் கேள்வியால் வெடித்த `ஸ்டார்லிங்க்' சர்ச்சை!

Oct 09, 2026 - 10:00
0
`அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸா?' – எலான் மஸ்கின் கேள்வியால் வெடித்த `ஸ்டார்லிங்க்' சர்ச்சை!

“அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸா?” – எலான் மஸ்க் எழுப்பிய இந்தக் கேள்வி, இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சந்தையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இந்தியாவில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பின்னால் பெருநிறுவனங்களின் தலையீடு இருப்பதாக ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்த மஸ்க், தற்போது முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் உரிமம் பெற்றிருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். அப்படியிருக்க, இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கு இன்னும் ஏன் அனுமதி இல்லை என்பதுதான் அவரது கேள்வி.

மஸ்க் ஏன் அம்பானியைச் சுட்டிக்காட்டினார்?

இந்தக் கேள்வி திடீரென எழுந்ததல்ல. இந்தியாவில் ஸ்டார்லிங்கின் வருகைக்கு சில பெருநிறுவனங்கள் தடையாக இருப்பதாக மஸ்க் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார்.

இந்திய சந்தையில் தங்களுடைய ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் சில தொழில் நிறுவனங்கள் ஸ்டார்லிங்கைத் தடுக்க முயற்சிப்பதாகவும், இதன் மூலம் இந்திய மக்களிடம் ஒரே நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர முயற்சி நடப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

முன்னதாக எக்ஸ் தளத்தில் “certain oligarchs” எனக் குறிப்பிட்ட மஸ்க், சில பெரும் தொழிலதிபர்கள் “monopolistic chokehold” மூலம் இந்திய சந்தையில் ஆதிக்கத்தைத் தக்கவைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். இதை அவர் “a crime against the people of India” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆனால் இங்கே முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அம்பானி ஸ்டார்லிங்கைத் தடுக்கிறார் என்பதற்கு இதுவரை எந்த உறுதியான ஆதாரமும் வெளியாகவில்லை. இது எலான் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டு மட்டுமே.

அரசின் நிலைப்பாடு என்ன?

மஸ்கின் குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான விதிமுறைகளோ, அவற்றை நடைமுறைப்படுத்தும் முறையோ எந்த நிறுவனத்துக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ இல்லை என்று தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

மஸ்கின் குற்றச்சாட்டு “baseless and misconceived” என்றும் அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் தற்போது மூன்று நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவை எலான் மஸ்கின் Starlink, ரிலையன்ஸ் ஜியோவின் Jio Satcom, பாரதி குழும ஆதரவுடன் செயல்படும் Eutelsat OneWeb.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், மூன்று நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டுவிட்டது என்பதுதான். ஆனால் உரிமம் கிடைத்துவிட்டதால் உடனடியாக வணிகச் சேவையைத் தொடங்கிவிட முடியாது. பாதுகாப்புச் சோதனை (Security Assessment) உள்ளிட்ட அடுத்தகட்ட நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும்.

“இது ஸ்டார்லிங்குக்கு மட்டும் இல்லை!”

மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானியின் விளக்கமும் இதையே உறுதிப்படுத்துகிறது.

செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களுக்கு உரிமங்களும் தற்காலிக அலைக்கற்றையும் (Provisional Spectrum) வழங்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது பாதுகாப்பு அனுமதி தொடர்பான நடைமுறை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஸ்டார்லிங்கிற்கு மட்டும் அனுமதி தாமதமாகவில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு. இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவையை வழங்கத் தயாராக இருக்கும் மூன்று நிறுவனங்களுமே அடுத்தகட்ட அனுமதிகளுக்காகக் காத்திருக்கின்றன.

Starlink - Jio

அம்பானி தரப்பு என்ன சொல்கிறது?

மஸ்கின் குற்றச்சாட்டு குறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானியிடம் கேட்கப்பட்டபோது, அவர் “No comments” என்று மட்டும் பதிலளித்துள்ளார்.

அதேநேரத்தில், ஜியோ செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறையில் வேகமாகப் பணியாற்றி வருவதாகவும், அதற்குத் தேவையான முழுமையான உள்நாட்டு தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜியோவின் முதல் தாழ்நிலைப் புவிச்சுற்றுப்பாதை செயற்கைக்கோள் (LEO Satellite) தொகுப்பு எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

“எங்களுக்கும் அனுமதி வரவில்லை!”

இந்தப் போட்டியில் ஜியோ மட்டும் இல்லை. பாரதி ஏர்டெல் குழுமத் தலைவர் சுனில் பாரதி மிட்டலும் தங்கள் நிறுவனத்துக்கான அடுத்தகட்ட அனுமதிகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர், “We are waiting for our own approvals” என்று கூறியுள்ளார். இதனால், இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதற்கான இறுதி அனுமதி நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பது தெரிகிறது.

ஸ்டார்லிங்க் வந்தால் என்ன மாற்றம்?

ஸ்டார்லிங்க் இந்தியாவில் சேவையைத் தொடங்கினால், பாரம்பர்ய இணையக் கட்டமைப்புகளைக் கடந்து கடினமான பகுதிகளில் உதவக்கூடும்.

தரைவழிக் கம்பிகள், செல்போன் கோபுரங்கள் போன்றவற்றை அமைப்பதில் சிரமம் இருக்கும் தொலைதூரப் பகுதிகளிலும் செயற்கைக்கோள் வழியாக இணைய இணைப்பை வழங்க முடியும். இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கு ஸ்டார்லிங்க் உதவும் என்பதையே மஸ்க் தனது வாதமாக முன்வைக்கிறார்.

அப்படியென்றால் உண்மை என்ன?

ஒருபுறம், சில பெருநிறுவனங்கள் ஸ்டார்லிங்கின் இந்திய வருகையைத் தடுக்கின்றன என்று எலான் மஸ்க் குற்றம்சாட்டுகிறார். அதிலும் தற்போது முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மறுபுறம், இந்திய அரசு மூன்று நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று நிறுவனங்களுக்குமான பாதுகாப்பு நடைமுறைகளும் ஒரே விதமாக நடைபெற்று வருவதாகவும் கூறுகிறது.

எலான்

அதனால், “அம்பானி ஸ்டார்லிங்கைத் தடுக்கிறார்” என்பது இப்போதைக்கு நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல; அது மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டு மட்டுமே.

இனி கவனிக்க வேண்டியது பாதுகாப்பு அனுமதிகள் எப்போது முடிகின்றன, அலைக்கற்றை தொடர்பான நடைமுறைகள் எப்போது நிறைவடைகின்றன, ஸ்டார்லிங்க் எப்போது இந்தியாவில் தனது வணிகச் சேவையைத் தொடங்குகிறது என்பதுதான்.

மஸ்கின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா, அல்லது இந்திய அரசின் விளக்கம்தான் இறுதி உண்மையா? அதற்கான பதிலை அடுத்தகட்ட அனுமதிகளும், இந்தியாவில் தொடங்கப்போகும் செயற்கைக்கோள் இணையப் போட்டியும்தான் சொல்லப்போகின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User