அபிஜித் விமானத்தில் கைது; 30,000 போலீஸ் குவிப்பு; 250 ரயில்கள் ரத்து; என்ன நடக்கிறது டெல்லியில்?

Oct 10, 2026 - 13:30
0
அபிஜித் விமானத்தில் கைது; 30,000 போலீஸ் குவிப்பு; 250 ரயில்கள் ரத்து; என்ன நடக்கிறது டெல்லியில்?

சிறப்பு வாக்காளர் திருத்தம் என்று அழைக்கப்படும் எஸ்.ஐ.ஆர். திட்டத்தில் மோசடி செய்ததாகக் கூறி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிதாக காக்ரோச் ஜனதா கட்சியும் இன்று முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார். அவர் டெல்லி விமான நிலையத்தில் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

அபிஜித்தும் அவரது கட்சித் தலைவர்கள் சவுரவ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விமானத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

விமானத்திற்குள் சென்று கைது

விமானத்திற்குள் அவர்களை பெண் போலீஸார் கைது செய்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. அவர்களிடம் பேசிய அஜிபித், ''கைது செய்யப்படுவதற்காக இங்கு வந்துள்ளேன். கைது செய்யுங்கள்'' என்று தெரிவித்தார். அதற்கு பெண் போலீஸார் இது கைது அல்ல என்றும், தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் கூறினர்.

உடனே எனது பேக்கை எடுத்துக்கொள்கிறேன் என்று அபிஜித் தெரிவித்தார். இக்கைது நடவடிக்கையை காக்ரோச் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காக்ரோச் கட்சித் தலைவர்களை முன்னெச்சரிக்கையாகப் பிடித்து சென்றது கண்டனத்திற்குறியது.

அவர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவதைத் தடுப்பதற்கான முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இதனைச் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை சுதந்திரத்தை மீறுவதாக இருக்கிறது. மூன்று தலைவர்களையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெர்மனியில் இருந்து வந்துள்ள யூடியூப்பர் துருவ் ரதியும் இன்று காலை கைது செய்யப்பட்டார். யூடியூப்பில் 33 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், இன்ஸ்டாகிராமில் 19 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும், 3.3 மில்லியன் X இல் பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ள துருவ் ரதி குருகிராமில் உள்ள 56 ஆம் பிரிவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.

இதற்காக டெல்லியில் இருந்து 50 போலீஸார் வந்திருந்தனர். காக்ரோச் கட்சியின் சட்டப்பிரிவுத் தலைவர் சிஜேபியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங்கும் போராட்டத்திற்கு முன்னதாக அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

டெல்லி போலீஸ் அதிகாரிகள் காலையில் தனது வீட்டிற்கு வந்ததாகவும், வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார். அவர் காரில் அமர்ந்திருந்தபோது, ​​போலீஸ்காரர்கள் அதைச் சுற்றி வளைத்ததாகவும் அவர் கூறினார்.

250 ரயில்கள் ரத்து

புது டெல்லியில் இன்று நடைபெறும் போராட்டத்திற்காக நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள் வருவதைத் தடுக்கும் நோக்கில் புது டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் 75 நீண்ட தூர விரைவு மற்றும் மெயில் ரயில்களும், 179 உள்ளூர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

துருவ்

இந்த 75 தொலைதூர ரயில்களில் பல்வேறு நகரங்களில் இருந்து 40 டெல்லிக்கும், டெல்லியில் இருந்து 35 ரயில்கள் மற்ற மாநிலங்களுக்கும் புறப்பட இருந்தது. இரண்டு நிலையங்களைச் சுற்றி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறி 179 உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்லும் 30 பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்லும் சாலைகள் மூடப்பட்டு 3 அடுக்கு தடுப்பு போடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு 20 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்த 30 ஆயிரம் போலீஸார் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User