மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை கொடூரம்: `பொதுநல வழக்கு தாக்கல் செய்தால், விசாரணை.!' - உயர் நீதிமன்றம்

Mar 11, 2026 - 12:31
 0
மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை கொடூரம்: `பொதுநல வழக்கு தாக்கல் செய்தால், விசாரணை.!' - உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் தோழிகளான தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, அவரது தோழியான 16 வயது சிறுமி ஆகியோருடன், நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில், இரு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள கிராமம் நோக்கிச் சென்றுள்ளார்.

மதுராந்தகம் அடுத்த தேவத்துார் பகுதியில் இருந்து, மது அருந்தி கொண்டிருந்த மர்ம நபர்கள் இருவர் அந்தச் சிறுவனின் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

இதை அறிந்த அந்தச் சிறுவன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். காட்டுப் பகுதி அருகே செல்லும்போது, சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது.

சிறார் வதை

அப்போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவரும் சிறுவன் மற்றும் 16 வயது சிறுமியை துரத்தி விட்டு, 14 வயது சிறுமியை அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு துாக்கி சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, சிலரது உதவியால் பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேட்டறிந்த மருத்துவர்கள், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தும் போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாகவும், சமீப காலமாக தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் இன்று அவசர முறையிடு செய்தார்.

இதை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, பொது நல வழக்காக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0