குமரி: மூதாட்டியை கொலை செய்து தீவைத்து எரித்த இளைஞர் - தற்கொலை போன்று காட்ட முயன்றது அம்பலம்

Aug 31, 2026 - 20:00
0
குமரி: மூதாட்டியை கொலை செய்து தீவைத்து எரித்த இளைஞர் - தற்கொலை போன்று காட்ட முயன்றது அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம் ​நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சின்னம்மாள் (77). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் சின்னம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் தாய் சின்னம்மாளை பார்க்க மகள் வனஜா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் சின்னம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோட்டார் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் சின்னம்மாளின் பின்தலையில் பலத்த காயம் இருந்தது. அவரது கை மற்றும் தலைமுடி எரிக்கப்பட்டு ஆடைகள் கலைந்து மிகக் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த நகைகளும், 15 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சின்னம்மாள் சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கொலை செய்யப்பட்ட மூதாட்டி சின்னம்மாள்

சின்னம்மாள் வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்ததில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் வீட்டுக்குள் வந்து வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே அந்த நபர்தான் இந்த கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகித்தனர். கொலை நடந்த வீட்டில் எஸ்.பி ஸ்டாலின் விசாரணை நடத்தினார். மூதாட்டி சின்னம்மாள் நீண்ட நாட்களாக அரிசி போன்ற ரேஷன் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்திருக்கிறார். இதனால் மூதாட்டி வீட்டில் எவ்வளவு பணம், நகை இருக்கும் என்று நன்கு தெரிந்த நபர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட வேல்ராஜ் என்ற விக்னேஷ்

இந்த நிலையில் சின்னம்மாளுக்கு உதவியாக வேலைகள் செய்துவந்த விருதுநகரைச் சேர்ந்த வேல்ராஜ் என்ற விக்னேஷ்(33) என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர். நாகர்கோவிலில் தங்கியிருந்த வேல்ராஜுக்கு சின்னம்மாளின் நகை, பணம் ஆகியவை எங்கே உள்ளது என்பது நன்கு தெரிந்திருக்கிறது. இதையடுத்து சின்னம்மாளை கொலை செய்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வேல்ராஜ் பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டதுபோன்று காட்டுவதற்காக அவரது உடலுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால், சி.சி.டி.வி கேமரா மூலம் வேல்ராஜ் போலீஸில் சிக்கிக்கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User