விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம் தேதி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நடந்த பட்டாசு உற்பத்தியின் போது வேதிவினை மாற்றத்தால் வேதிப்பொருள் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்ததில் 5 உற்பத்தி அறைகள் இடிந்தன. குறிப்பாக பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாகவும், வீரியம் அதிகமுள்ள வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
இந்த வெடி விபத்தில் 23 பேர் உடல் கருகியும், சிதறியும் உயிரிழந்தனர். இதில், 19 பேர் பெண்கள் எனவும், 2 பேர் ஆண்கள் எனவும் தெரிய வந்தது. 4 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவில் கருகிப்போனது. இதற்கிடையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 2 பெண்கள் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. மீட்புப் பணியின் போது மீண்டும் பட்டாசுகள் வெடித்ததில் தீயணைப்பு அதிகாரிகள், போலீஸார் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
ஆய்வில் இருந்த மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதில், சேர்வைகாரன்பட்டி என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பட்டாசு தொழிலாளர்கள் சிலரிடம் பேசினோம், “வழக்கமாக தீபாவளி, புத்தாண்டு, தசரா உள்ளிட்ட பண்டிகைகளை கணக்கிட்டு பட்டாசு உற்பத்தி நடக்கும். தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் காலம் என்பதால் இது தொடர்பாகவும் நிறைய ஆர்டர்கள் பட்டாசு ஆலைகளுக்கு கிடைத்துள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. 
வரும் 23-ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில் கடந்த 20-ம் முதல் 4 நாட்களுக்கு பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்படிருந்தது. இதனால், நேற்று ஒருசில ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நடந்துள்ளது. பொதுவாக பட்டாசு ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு உற்பத்தி செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. அதையும் மீறி தொழிலாளர்களை கட்டாயமாக வரவழைத்து உற்பத்தி நடந்துள்ளது. இதில், ஆண்களை விட பெண் தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்டர்களின் இலக்கினை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் உற்பத்தியை தீவிரப்படுத்தியதும், தொழிலாளர்களிடம் அதிக வேலை வாங்கியதுமே விபத்துக்கு காரணம். ஆலையின் உரிமையாளரான முத்துமாணிக்கம், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு குத்தகைக்கு விட்டதாகவும், அதனால், அனுமதிக்க வேண்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக பணியமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட அதிக சத்தம் எழுப்பும் சரவெடி சரங்களே பயன்படுத்தப்படும். 
அதனால் சரவெடிகள்தான் தயாரித்திற்கக்கூடும் என்கிறார்கள். கடந்த காலங்களைப் போல் பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை. அதிகாரிகளின் அலட்சியமும் காரணம்” என்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் பேசினோம், “பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், இறுதிச்சடங்கு செய்ய ரூ.50 ஆயிரமும், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.3 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஆலை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் அவர்களை தேடி வருகிறார்கள். வெடி விபத்து ஏற்பட்ட ஆலையை முறையாக கண்காணிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க அதிக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். 
ஒரு பட்டாசு ஆலை உரிமையளர் செய்யும் தவறால் மாவட்டத்தில் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படுகிறது. விதிகளை மீறும் ஆலையின் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும். அவர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டு முறைகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது” என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0