கரூர் வழக்கு: `உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்!' - மனுவை திரும்ப பெற்ற திமுக

Jul 07, 2026 - 12:31
0
கரூர் வழக்கு: `உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்!' - மனுவை திரும்ப பெற்ற திமுக

கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சாட்சிகளை திசைதிருப்பும் வகையில் பேசுவதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், வரும் ஜூலை 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அரசு ஆணைகள் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். சிபிஐ விசாரணை நிலுவையில் இருக்கும் இந்தச் சூழலில், இந்தச் சந்திப்பு சாட்சிகளைப் பாதிக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

தவெக தலைவர் விஜய்

மேலும், கடந்த ஜூலை 2ஆம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய திமுக அரசு குறித்துப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும் தடை விதிக்கக் கோரப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ``குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வதாகவும், ஊடகங்களில் தொடர்ந்து பேசி வருவதாகவும் வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி விஸ்வநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். "முதலமைச்சரின் பேச்சையும், செய்திகளையும் உச்ச நீதிமன்றம் தான் கட்டுப்படுத்த வேண்டுமா? நீங்கள் பேச்சுரிமைக்கு தடை விதிக்கக் கோருகிறீர்களா? அரசியல் எதிரிகளின் கருத்துக்களுக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்றம்

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் வழங்குவது எப்படி வழக்கை பாதிக்கும் என்றும், இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் எஃப்.ஐ.ஆரில்  குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

உச்ச நீதிமன்றத்தை ஓர் அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார் .நீதிமன்றத்தின் இந்த கடுமையான அணுகுமுறையை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் முற்பட்டனர்.

இதனால் திமுக தரப்பு வழக்கறிஞர், மனுவை வேறு சட்ட வழிமுறைகள் மூலம் அணுக அனுமதி பெற்று, அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், திமுகவின் மனுவை "திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி" தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், வரும் ஜூலை 10 அன்று கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நலத்திட்டங்கள் வழங்குவதில் இருந்த சட்டச் சிக்கல்கள் அனைத்தும் நீங்கியுள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User