டெல்லிக்குப் புகாரளித்த ஸ்டாலின்; 4வது நாளாகச் சரிபார்க்கப்படும் கொளத்தூர் EVM மெஷின்கள்

Aug 01, 2026 - 13:00
0
டெல்லிக்குப் புகாரளித்த ஸ்டாலின்; 4வது நாளாகச் சரிபார்க்கப்படும் கொளத்தூர் EVM மெஷின்கள்

கொளத்தூர் தொகுதியின் 14 பூத்-களின் EVM மெஷின்களை மீண்டும் சரிபார்த்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் இந்தச் செயல்முறை நடத்தப்பட்டு வருகிறது.

EVM Verification
EVM Verification

கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோற்றிருந்தார். முடிவுகள் வெளியான பிறகு மே7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் அனுப்பப்பட்டிருக்கிறது.

கொளத்தூரில் திமுகவுக்குச் சாதகமான வாக்களார்கள் இருக்கும் பூத்-களில் கூட எங்களுக்குக் குறைவான வாக்குகளே பதிவாகியிருக்கின்றன. எனவே, குறிப்பிட்ட அந்த 14 பூத்-களில் EVM மெஷின்களில் பதிவான வாக்குகளைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்பதே புகார்.

இதைக் கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள EVM கிடங்கில் கொளத்தூர் பூத்-களின் மெஷின்களைச் சரிபார்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.

EVM Verification
EVM Verification

இந்தச் சரிபார்த்தலுக்காக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட 36 வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் பேசுகையில், ''மொத்தமாக 14 பூத்-களைச் சரிபார்த்து முடிக்க 7 நாள்கள் ஆகும். ஒரு நாளைக்கு 2 பூத்-களின் மெஷின்களை மட்டுமே சரிபார்க்க முடியும். முதலில் அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் ஏப்ரல் 23 ஆம் தேதி EVM இல் பதிவான வாக்குகளைக் காண்பித்து உறுதிப்படுத்துவோம்.

அதன்பிறகு அந்த வாக்குகளை மெஷினிலிருந்து நீக்கிவிட்டு, முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு மெஷினிலும் 500 முதல் 1400 வாக்குகள் வரை பதிவு செய்து அவை மெஷினில் சரியாக ரெக்கார்ட் ஆகிறதா என்பது முகவர்கள் முன்னிலையிலேயே உறுதிப்படுத்தப்படும். காஞ்சிபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஒரு சில தொகுதிகளில் இந்தச் சரிபார்ப்பு செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது'' என்றனர்.

ஒரு தொகுதியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டுமே EVM சரிபார்ப்பு நடவடிக்கைக்குப் புகாரளித்து விண்ணப்பிக்க முடியும். அந்தவகையில்தான் கொளத்தூர் தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User