“முடி இல்லைன்னா என்ன? மூளை இருக்கே! முடியும்னு நினைச்சாலே...”- இவர்கள் SURVIVOR-கள் அல்ல WINNER-கள்

Aug 02, 2026 - 12:30
0
“முடி இல்லைன்னா என்ன? மூளை இருக்கே! முடியும்னு நினைச்சாலே...”- இவர்கள் SURVIVOR-கள் அல்ல WINNER-கள்

சென்னை, அடையாறு புற்றுநோய் மையத்தில் வருடா வருடம் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்தவர்களை ஒன்றுதிரட்டி “Survivor’s reunion” என்ற பெயரில் ஓர் அழகான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2022-க்குப் பின் சில ஆண்டுகளாக நடத்த முடியாமல் போன இந்நிகழ்வானது இம்மாத முதல் நாளில் (Aug 1) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் ஓர் அறக்கட்டளையின் சார்பாக பேசிய, மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெண் ஒருவர், புற்றுநோய் சிகிச்சையின் போது ஏற்படும் முடி இழப்பானது எப்படி நோயாளிகளின் குறிப்பாக பெண்களின் தன்னம்பிக்கையை உடைக்கிறது என்பதைப் பற்றி கூறினார். அவர்களுடைய அறக்கட்டளையின் மூலமாக அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை காரணமாக முடியை இழந்தவர்களுக்கு இலவசமாக விக் வழங்கிவருகிறார்கள் என்பதையும் கூறினார்.

டெர்ரி ஃபாக்ஸ் (Terry fox) என்கிற கனடாவைச் சார்ந்த இளைஞர் எவ்வாறு ஒரு காலினை புற்றுநோயால் இழந்த பின்னரும் மனம் தளராமல் மாரத்தான் ஓடினார் என்பதை பற்றியும் கூறினார்.

இவருக்குப் பின் நாக்கு புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவரின் உரையின் தொடக்கமே “நோய் நாடி நோய்முதல் நாடி” என்ற திருக்குறள் தான். “Never lose your hope”-நம்பிக்கையை மட்டும் என்றும் இழந்துவிடாதீர்கள் என்று கூறினார்.

“முடி இல்லாட்டி என்ன? மூளை இருக்கே, முடியும்னு நினைச்சா முடியும்”, “எங்களுக்கு sympathy வேண்டாம் உங்க empathy கிடைச்சா போதும்” என்று மூளைக்கட்டியிலிருந்து மீண்டு வந்து, கலையில் ஆர்வம் கொண்ட பெண் ஒருவர் மனதைத் தொடும்படி கூறினார்.

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்ந்த புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த ஒருவர் பேசும்போது தான் புரிந்தது, இது போன்ற கொடிய நோய்களில் இருந்து மீண்டு வருவது எந்த அளவிற்கு கடினமோ, அதே அளவுக்குக் கடினமானது, வேலை கிடைப்பது என்பது.

இம்மையத்தின் தலைவரான ராஜா பேசுகையில், சிறிய அளவிலான அறிகுறிகள் இருக்கும்போதே புற்றுநோயா? இல்லையா? என்கிற சோதனை செய்து பார்க்க வேண்டும். அப்படி புற்றுநோய் தான் என்று உறுதியானால் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும். அப்படி சிகிச்சை எடுத்தால் நோய் குணமாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கமே புற்றுநோய் மீது மக்களுக்கு உள்ள பயத்தை போக்கவும், சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் குணப்படுத்திவிடலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

மனம் தளராமல் தன்னம்பிக்கையோடு இருந்தால் வாழ்வில் எதை வேண்டுமானாலும் வெல்லலாம் என்று வென்று காட்டி, அனைவர் மனதிலும் நம்பிக்கையை விதைத்த இந்த வெற்றியாளர்களுக்கு எங்களது வாழ்த்தும், நன்றிகளும், என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User