ஜெ. உத்தரவை மீறி பறிக்கப்பட்ட வேட்பு மனு; சேவல் சின்னத்தில் போட்டியிட்டது குறித்து செ.கு.தமிழரசன்

Apr 4, 2026 - 18:01
 0
ஜெ. உத்தரவை மீறி பறிக்கப்பட்ட வேட்பு மனு; சேவல் சின்னத்தில் போட்டியிட்டது குறித்து செ.கு.தமிழரசன்

ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மறு தினம் முடிவடைகிறது. அதற்கடுத்த நாள் அதாவது ஏப்ரல் 7ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கவிருக்கிறது.

இந்த வேட்பு மனு பரிசீலனையின் முடிவில்தான் வேட்பாளர்களது மனுக்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டு அவர்கள் போட்டியிட முடியாமல் போகுமா என்பது தெரியவரும்.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யின் வேட்பு மனுவில் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களைத் தெரிவிக்காதது, வயதைக் குறிப்பிட்டதில் முரண் எனச் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி வரும் சூழலில், வேட்பு மனு பரிசீலனையின்போது எந்தெந்த வகையிலெல்லாம் மனுக்கள் நிராகரிக்கப்படலாம் என்பது குறித்து இந்தியக் குடியரசுக் கட்சியின் செ.கு. தமிரசனிடம் பேசினோம்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராகவும் பதவி வகித்துள்ள இவர் ஒரு முறை வேட்பு மனுத் தாக்கல் போது, இவர் போட்டியிடுவதைத் தடுக்க சிலர் இவரது மனுவைப் பிடுங்கிக் கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

''வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறவர்கள் மனுவில் குறிப்பிடும் தனிப்பட்ட தகவல்கள் அதாவது சொத்து மதிப்பு, வழக்கு விபரங்கள், கல்வி முதலான சுய விவரத் தகவல்களைத் தவறாகக் குறிப்பிட்டால் மட்டுமே மனுவைத் தள்ளுபடி செய்வாங்க.

அப்ப கூட பரிசீலனையின் போது அந்தத் தேர்தல் அலுவலர் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிச்சு அதை அவர் ஏத்துகிட்டா மனு ஏற்றுக் கொள்ளப்படும். மனுவில் எல்லாத் தகவல்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் அந்த அதிகாரியால் நம்ம மனுவை நிராகரிக்க முடியாது.

வேட்பு மனுத் தாக்கல்
வேட்பு மனுத் தாக்கல்

மனிதப் பிழைகள்னு சொல்வாங்களே, அதைப் பொருட்படுத்த மாட்டாங்க. அதாவது தப்பா நிரப்பிட்டா அதைச் சரி செய்துடலாம். ஆனா சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சரியா இருந்தா போதும்.

வேட்பு மனுத் தாக்கலின்போது எனக்கு நடந்த அந்தச் சம்பவத்தை ஒரு வகையில் நல்லதுக்குனுதான் சொல்வேன். ஏன்னா அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் வேட்பு மனுத் தாக்கலின்போது இத்தனை பேர் மட்டுமே வேட்பாளருடன் வரணும்கிற விதியையே கொண்டு வந்தாங்க'' என்றவர், அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார்..

சேவல், இரட்டைப் புறா என அதிமுக இரண்டாகப் பிரிந்து சந்தித்த தேர்தல் அது. ஜெயலலிதா அணியில் எங்க கட்சிக்கு சீட் கேட்டோம். அதிமுகவுடன் ஆரம்பத்துல இருந்தே நல்ல நட்புடன் இருந்துட்டு வர்றது இந்தியக் குடியரசுக் கட்சி. கூட்டணி இறுதி ஆகறதுக்குள்ளேயே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிச்சிட்டாங்க அந்த அம்மா. அதுல பொன்னேரி தொகுதியில் அதிமுக போட்டியிடும்னு அறிவிக்கப்பட்டிருந்திச்சு.

கடைசி நேரத்துல நான் போய் பொன்னேரியைக் கேட்டேன். 'சரி, நீங்க நில்லுங்க'னு சொல்லி அவங்க வேட்பாளரைக் கூப்பிட்டுத் தகவலையும் சொல்லிட்டாங்க. ஆனாலும் அந்த வேட்பாளர் மனுத்தாக்கல் செய்துட்டார்.

கடைசி நாள் வரைக்கும் பார்த்தேன். அவர் வாபஸ் வாங்கறதா தெரியலை. என்ன செய்யறதுனு தெரியாம இருந்தப்ப அதிமுக தலைமையிலிருந்து என்னைத் தாக்கல் செய்யச் சொன்னாங்க. கடைசி நாள். மனுதாக்கலுக்கான நேரம் முடிய சில மணி நேரம் இருக்கிறப்ப போய் டெபாசிட் பணத்தைக் கட்டிட்டு மனுவை வாங்குகிற அதிகாரிகிட்ட நான் மனுவைக் கொடுக்கிறேன். என் பின்னாடி இருந்த கூட்டத்துல இருந்து ஒருத்தர் பாய்ஞ்சு போய் மனுவைப் பிடுங்கிட்டு ஓடிட்டார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அதிமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் ஆதரவாளராம் அவர். உடனே அந்தச் சூழலில் என்ன செய்யறதுனு தெரியலை.

நான் கொஞ்சம் உஷாராகிட்டேன். 'டெபாசிட் கட்டின ரசீது எங்கிட்ட இருக்கு. உங்க அலுவலகத்துக்கு வந்து உங்ககிட்ட மனுவைக் கொடுத்துட்டேன். பத்திரிகையாளர்கள் சிலர் போட்டோ எடுத்து அதுவும் சாட்சியா இருக்கு. அதனால இனி என்ன செய்யறதுனு நீங்கதான் முடிவு செய்யணும். ஆனா எனக்குப் பாதகமான முடிவு வந்தா நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்'னு சொன்னதும், அந்த அதிகாரிக்கு என்ன செய்யறதுனு தெரியலை. தலைமைத் தேர்தல் ஆணையரகத்துல பேசி, பிறகு எனக்கு அவகாசம் கொடுத்தாங்க.

அதன்பிறகு ஜெயலலிதா மேடத்தைச் சந்திச்சு அவங்ககிட்ட கையெழுத்து வாங்கி புது மனுவைத் தாக்கல் செஞ்சதும் அதை ஏத்துக்கிட்டாங்க.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகே வேட்பு மனுத் தாக்கலின்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஆட்கள் உடன்ன் வரணும்கிற விதியைக் கொண்டு வந்தாங்க'' என்றார் தமிழரசன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0