சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்

Mar 28, 2026 - 11:33
 0
சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் இஸ்ரேல் கடுமையான ஏவுணணைத் தாக்குதலை நடத்தியது. மேலும் ஈரானில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களை விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தாலும் ஈரானின் மற்ற இடங்களில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு முதல் முறையாக ஏமனும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரான் சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த விமானப்படைத்தளத்தை அமெரிக்கா தன் வசம் வைத்திருந்தது.

அங்கு அதிக அளவில் அமெரிக்க ராணுவ வீரர்களும், போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஈரான் தாக்குதலில் விமானப்படை தள கட்டடம் மீது குண்டு விழுந்து வெடித்தது. கட்டடம் தாக்கப்பட்டபோது அதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களில் 12 பேர் காயம் அடைந்தனர். அதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் அமெரிக்காவிற்கு சொந்தமான எரிபொருள் நிரம்பும் விமானங்கள் அதிக அளவில் சேதம் அடைந்தது. ஒரு ஏவுகணையும், சில ஆளில்லா ட்ரோன்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஈரான் நடத்திய தாக்குதலில் 5 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்தன. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும்போரில் இது வரை அமெரிக்க வீரர்கள் 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு 2.9 பில்லியன் இழப்பு

ஈரானுக்கு எதிரான இப்போரில் அமெரிக்காவிற்கு ராணுவ வீரர்களின் இழப்பு குறைவு என்றாலும் ராணுவ உபகரணங்கள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. முதல் 3 வார போரில் அமெரிக்காவிற்கு அதிக பட்சமாக 2.9 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு இழப்பு என்ற விபரத்தை பென்டகன் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். குவைத்தில் அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15E ரக போர் விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் KC-135 விமானம் மற்றொரு விமானத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் அதில் இருந்த 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஏராளமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன. அதோடு அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9 ரக ட்ரோன்களும் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமான பாதுகாப்பு ரேடாரை ஈரான் தாக்கி அழித்துள்ளது.

அமெரிக்க வீரர்கள் ஹோட்டலில் தஞ்சம்

ஈரானின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களது தளத்தை காலி செய்துவிட்டு இப்போது ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள பொருளாதார மண்டத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை வான்பாதுகாப்பு இடைமறித்து அழித்தது. இதனால் கீழே விழுந்த கழிவுகள் பட்டு 5 இந்தியர்கள் காயம் அடைந்தனர்.

குவைத்தில் உள்ள புபியான் தீவில் அமெரிக்க கடற்படையினர் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் அந்த தளம் முழுமையாக சேதம் அடைந்து இருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள வர்த்தக துறைமுகம் ஒன்றும் சேதம் அடைந்து இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0