Chennai : 'ஊருக்கு போக பஸ் இல்ல!' - நள்ளிரவில் அவதிப்பட்ட மக்கள்; கோட்டைவிட்ட போக்குவரத்து துறை?
சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில், சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு வாக்களிக்க புறப்பட்டுச் சென்ற மக்கள் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். 
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 6234 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மேலும் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 பிற்பகல் வரைக்கும் மொத்தமாக 11,323 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் நள்ளிரவில் கடும் அவதிப்பட்டிருக்கின்றனர். பேருந்துகள் கிடைக்காததால் நள்ளிரவிலேயே மக்கள் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து போராடவும் செய்திருக்கின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் செல்லும் பயணிகள் அதிகளவில் பேருந்து கிடைக்காமல் தத்தளித்திருக்கின்றனர். 
பேருந்து கிடைத்து பயணத்தை தொடங்கியவர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட்டிருக்கின்றனர். தாம்பரத்தை தாண்டவே பல மணி நேரங்கள் பிடித்திருக்கிறது. இரவு பேருந்து ஏறி காலையில் ஊரை எட்டி வாக்களிக்கலாம் என திட்டமிட்டிருந்த பயணிகளும் கடும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இரவு சென்னையிலிருந்து கிளம்பியவர்கள் காலை வரைக்குமே திண்டிவனம், விழுப்புரம் வரைக்கும்தான் சென்றிருக்கின்றனர். இதனால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற ஊர்களை சேர்ந்த பயணிகள் வாக்குப்பதிவு முடிவதற்குள்ளாவது ஊருக்கு சென்று சேருவோமா என சமூகவலைதளங்களில் கவலையோடு பதிவு செய்து வருகின்றனர்.
பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் குறித்து விளக்கம் கேட்க போக்குவரத்து துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிருவின் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொண்டோம், அழைப்பை ஏற்கவில்லை. அதிகாரிகள் சிலரிடம் விசாரிக்கையில், 'பேருந்துகள் போதுமான அளவுக்கு விடப்பட்டிருந்தாலும், நகரம் முழுவதும் அதிகமான போக்குவரத்து நெரிசல் நிலவியதால் உரிய நேரத்தில் பேருந்துகளால் பேருந்து நிலையத்தை எட்ட முடியவில்லை.
உதாரணத்துக்கு திருச்சி, கும்பகோணம் போன்ற பகுதிகளிலிருந்து வண்டலூரில் யூடர்ன் அடித்து கிளாம்பாக்கம் வந்து சேர வேண்டிய பேருந்துகளை தாம்பரம் வரைக்கும் திருப்பி விட்டு யூடர்ன் அடித்து கிளாம்பாக்கம் வர வைத்தார்கள். ஆனால், தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் வந்து சேரவே 5-6 மணி நேரங்கள் தாமதமானது. அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதுதான் பிரச்னை' என்கின்றனர்.
100% வாக்குப்பதிவை எட்ட வேண்டுமென விளம்பரம் மேல் விளம்பரமாக செய்து கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், உரிய அதிகாரிகளுடன் முறையாக திட்டமிட்டு பயணிகளுக்கு முறையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0