IPL 2026 playoff: 'லாஜிஸ்டிக் நேபாளா...' - வெகுண்டெழுந்த RCB; குஜராத் டைட்டன்ஸ் தோற்றது எப்படி?

May 27, 2026 - 10:31
0
IPL 2026 playoff: 'லாஜிஸ்டிக் நேபாளா...' - வெகுண்டெழுந்த RCB; குஜராத் டைட்டன்ஸ் தோற்றது எப்படி?

ரெண்டே ரெண்டு பேருக்கு இடையில்தான் போட்டி. அது யார் சிறந்தவர்கள் என்பதில் ஆர்சிபி பௌலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலானதுதான்.

Play Offs
Play Offs

டிஃபெண்டிங் சாம்பியன் - இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தொடர் முழுவதும் பல சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருந்த ஆர்சிபி அதன் உச்சகட்டமாக முதல் அணியாக ப்ளே ஆஃப்பில் நுழைந்தது.

குவாலிஃபயரிலோ, 'இன்னுமொரு கோப்பை வெல்ல தாங்கள் ஏன் தகுதியானவர்கள்' என்பதையும் காட்டி இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்துள்ளனர்.

`The Tale Of Multiple Partnerships' என்றே தலைப்புத் தரலாம்; அந்த அளவிற்கு வெட்ட வெட்ட வீழ்த்த முடியாதபடி அதிவேகமாக மீண்டு வந்தது ஆர்சிபி பேட்டிங். சுருங்கச் சொல்ல வேண்டுமேயானால் விக்கெட் வீழ்த்தப்பட்ட அந்த ஐந்து பந்துகளைத் தவிர வேறு எப்போதும் பெரிய அளவிலான தாக்கத்தை குஜராத் டைட்டன்ஸால் ஏற்படுத்தவே முடியவில்லை எனலாம்.

38 பந்துகளில் 72 ரன்களைக் குவித்த கோலி - படிக்கல் கூட்டணியும் 45 பந்துகளில் 95 ரன்களை வேட்டையாடிய பட்டிதர் - க்ருணால் கூட்டணியும்தான் கேம் சேஞ்சர்ஸ்.

இந்த இரு கூட்டணிகளும் ஆடிய காலகட்டத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்களது அணுகுமுறைதான் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் என வாழ்ந்து கெட்ட அணிகள் என்ன தவறினை செய்து வந்துள்ளன என்பதற்கான ப்ளூ ப்ரிண்ட்.

தான் வீசிய போட்டியின் ஒன்பதாவது ஓவரில், செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த கோலி மற்றும் படிக்கல் ஆகிய இரு விக்கெட்களையும் ஹோல்டர் வீழ்த்தி விட்டார். சற்றே களம் Two Paced ஆக செயலாற்ற, அதனை ஹோல்டர் சரியாகப் பயன்படுத்த இரு விக்கெட்டுகள் சரிந்தது.

இது குஜராத் டைட்டன்ஸுக்கான பெரிய திருப்பு முனையாக அமையும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு சாம்பியன் அணி எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடிக் காட்டியது ஆர்சிபி.

RCB vs GT
RCB vs GT

அடுத்தடுத்த விக்கெட்டுகள் பொதுவாக ஓர் அணியை நிலைகுலையச் செய்யும், சற்றே நிலைத்து ஆடிவிட்டு பின் ஆட்டங் காட்டலாம் எனத் தோன்ற வைக்கும். ஆனால் அது ஒருநாள் போட்டிகளுக்குரிய இலக்கணக்குறிப்பு.

பேட்டினை கேடயமாகப் பயன்படுத்துவது டி20-க்கு ஏற்புடையதல்ல, அது இங்கே ஆயுதம் மட்டுமே. ஆம்! பார்ட்னர்ஷிப்களை மெதுவாகக் கட்டமைப்பது இங்கே வேலைக்காகாது. `கீழே விழுந்த பின் எவ்வளவுக்கு எவ்வளவு அதிவேகமாக எழுந்து நிற்கிறோம், திரும்பத் தாக்குகிறோம்' என்பதுதான் முக்கியம்.

ஆர்சிபி இத்தொடர் முழுவதுமே இதே அட்டாக்கிங் மைண்ட் செட்டோடுதான் ஆடியது, இப்போட்டியிலும் அவர்களுக்கு அதுதான் கைகொடுத்தது.

2023-ல் கோப்பை வென்ற சீசனில் சிஎஸ்கே அப்போது ஓர் அணுகுமுறையை வைத்திருந்தது. ஏதோ இரண்டு அல்லது மூன்று பேட்ஸ்மேன்களை நம்பி இருக்காமல் எல்லோரது பேட்டிலிருந்தும் அதிரடியாக ரன்கள் வருவதை உறுதிசெய்தனர்.

அதுதான் அவர்களது சக்ஸஸ் ஃபார்முலாவாகவும் அந்த சீசனில் மாறியது. இந்தப் போட்டியிலும் ஆர்சிபி ஆடியது அதே பேட்டர்னில் தான்.

பிரதான ரன்குவிப்பு இரு பார்ட்னர்ஷிப்களால் நேர்ந்ததெனினும் உடனே முறிந்த பட்டிதர் - படிக்கல் தவிர்த்து மற்ற எல்லாக் கூட்டணிகளுமே சின்னச்சின்ன கேமியோக்களை ஆடியிருந்தனர். ப்ளே ஆஃப் டார்கெட்களிலேயே அதிகபட்சமான 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதற்கும் இதுவேதான் காரணம்.

வெற்றி உறுதி என்ற நம்பிக்கையோடு ஆர்சிபி இரண்டாவது பாதியைத் தொடங்கியதற்குரிய துணிவினையும், குஜராத்துக்கு மனோரீதியிலான பின்னடைவையும் இந்த இலக்குதான் கொடுத்தது. ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஓரளவு இறுக்கிப் பிடிக்கவில்லையெனில் ஸ்கோர் 270-ஐ தாண்டி இருந்தால்கூட ஆச்சரியப்படுத்துவதற்கில்லை.

பட்டிதர் அப்படியான ஒரு முன்னுதாரணமான கேப்டன் இன்னிங்ஸைத்தான் ஆடியிருந்தார். மொத்த இன்னிங்க்ஸிலும் ஒரே ஒரு டாட் பாலை மட்டுமே ஆடியிருந்ததும், 280-ஐ கடந்த அவரது ஸ்ட்ரைக்ரேட்டும் மற்ற அணிகளுக்கு ஆர்சிபியின் கேப்டனாக அவர் விடுத்த எச்சரிக்கை குறியீடுகள்தான்.

Rajat
Rajat

ஆர்சிபியின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த குஜராத் டைட்டன்ஸுக்கு 18 ஓவர்கள் தேவைப்பட்டது. ஆனால் குஜராத்தின் அதே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த ஆர்சிபிக்கு அதில் மூன்றில் ஒரு பங்காக ஆறு ஓவர்கள் மட்டுமே தேவைப்பட்டது. (மீதம் ஐந்து விக்கெட்டுகள் வாலாக நீண்டது வேறு கதை) பவர்பிளேவுக்கு உள்ளாகவே போட்டியின் முடிவை ஏறக்குறைய அறிவித்து விட்டது ஆர்சிபி.

முதல் பாதி ஆட்டத்தில் பட்டிதரின் கேட்ச் இருமுறை விடப்பட்டது கிரிக்கெட்டில் இரு அணிகளுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் கொஞ்சம் விளையாடும் என்பதனை சுட்டிக் காட்டியது என்றால் அது ஆர்சிபியுடன் இணைந்து குஜராத்துக்கு எதிராக ஆடுகிறதோ என்ற சந்தேகத்தினை சாய் சுதர்சனின் ஹிட் விக்கெட் காட்டிவிட்டது. இனிமேல் சில நாட்களாவது ஸ்கொயர் கட் அடிக்கவே சாய் சுதர்சன் தயங்குவார்.

குஜராத்துக்கு இன்னொரு முக்கியப் பாடமும் புகட்டப்பட்டுள்ளது. இத்தொடரில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில்தான் இருக்கின்றனர். தலா 600 ரன்களை இருவருமே கடந்துள்ளனர்.

பல போட்டிகளில், "எங்களைத் தாண்டி எங்களது அணியைத் தொடு", என்று அணிக்கான அரணாக இருவரும் கூட்டாக நின்றுள்ளனர். இவர்கள் இருவரையும் வெளியேற்றினாலும் பட்லரின் அதிரடி தொடரும். இதனால் மத்திய மற்றும் பின்வரிசை வீரர்களுக்குப் பெரியளவிலான பளுவோ பொறுப்போ முன்னதாக இருந்ததில்லை.

அதுதான் இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு பேக் ஃபயரானது. சுற்றியிருப்பது பாதுகாப்புச் சுவர்தான் என்றாலும் எதிர்பாராத நேரத்தில் அது சிக்கிக் கொண்டிருந்த சிறைக் கதவுகளாகவும் ஆகலாம். உண்மைதான்!

டாப் 3 ஆல் பல போட்டிகளைச் சுலபமாக வென்று வந்த குஜராத் டைட்டன்ஸ் அவர்கள் ஆட்டமிழந்த போது இரு துடுப்புகளையும் இழந்த ஓடம் போல அதற்குப்பின் கரை சேரவில்லை.

RCB
RCB

ஆர்சிபியின் பேட்ஸ்மேன் ஏற்படுத்திய தாக்கத்தையும் மிஞ்சி நின்றது அவர்களது பௌலிங். கில்லை வீழ்த்திய அந்த Wobble Seam ஏன் புவ்னேஸ்வர் குமார் ஆர்சிபிக்குக் கிடைத்த கோல்டன் டிக்கெட் என்பதனை மீண்டுமொரு முறை நிரூபித்தது.

வீசிய 3.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்ட ஜேகோப் டஃபி, இரட்டை விக்கெட்டுகள் ஓவர் தந்த ரஷிக் சலாம், பட்லர் எனும் அதிமுக்கிய விக்கெட்டை வீழ்த்திய ஹாசில்வுட், எக்கனாமிக்கலாக பந்து வீசி இரு விக்கெட்களையும் வீழ்த்திய க்ருணால் பாண்டியா என யாருமே சோடை போகவில்லை. எக்ஸ்ட்ராகளைக்கூட எகிறாமல் பார்த்துக் கொண்டனர்.

100 ரன்களுக்குள் சுருட்டி விடுவார்களோ என்ற பயத்திலிருந்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி வருமோ எனக் காத்திருந்து இறுதியில் அது 92 ரன்கள் வித்தியாசத்தில் வந்து சேர்ந்தது என்பது மட்டும்தான் குஜராத்தை அவமானகரமான தோல்வியில் இருந்து காப்பாற்றியது.

திவேதியா என்ற ஒற்றை மனிதனின் வைராக்கியத்தாலும் அவருக்குத் துணையாக நின்ற சிராஜின் ஆதரவாலும் போட்டி இறுதி வரை நீண்டது. எனினும் அந்த பார்ட்னர்ஷிப்பையும் உடைத்து பர்ப்பிள் கேப்பையும் கைப்பற்றிய புவ்னேஷ்வர் குமார்தான் இந்தச் சீசனில் ஆர்சிபிக்கான அடித்தளம்.

RCB
RCB

மொத்தத்தில் ஆர்சிபியின் கைகளை இரு பக்கமும் பிடித்துக் கொண்டு ஃபைனலுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர் பேட்ஸ்மேன்களும் பௌலர்களும். குஜராத்துக்கு இன்னுமொரு வாய்ப்பும் கூடவே சவாலும் காத்திருக்கிறது. கேப்டன் பட்டிதரும் போற்றப்பட வேண்டியவர் தான் என்பதில் சந்தேகமேயில்லை.

அட்டாக்கிங் அணுகுமுறையோடு இண்டெண்ட் என்ற வார்த்தையை தங்களது அகராதிக்குள்ளும் ரோஹித் ஷர்மா கொண்டு வந்த பின் தான் பேக் டு பேக் இந்தியா இரண்டு டி20 உலக கோப்பைகளை வென்றது. ஆர்சிபிக்கும் ஒருவேளை அது நடக்க வாய்ப்பிருக்கிறதா?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User