தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி!

Jun 15, 2026 - 13:01
0
தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி!

இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை திருவிழா. குரூப் A, குரூப் B என மொத்தம் 12 அணிகள் களம் காணும் இந்தத் தொடரில், ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கையோடு இருபது ஓவர் உலகக்கோப்பையையும் வெல்லத் தயாராக இறங்கியிருக்கிறது இந்திய அணி. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி. அதிலும் சிறப்பாக ஆடி தொடரை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது இந்திய அணி.

Team India
Team India

ஆடவர் அணியாக இருந்தாலும் சரி, மகளிர் அணியாக இருந்தாலும் சரி, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. நேற்று (14.06.2026) நடைபெற்ற இந்தத் தொடரின் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி, வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆரம்பமே அதிரடிதான்! இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜெர்சி நம்பர் 18 களமிறங்கினாலே பாகிஸ்தான் அணியை பந்தாடுவது வழக்கமாகிவிட்டது.

மந்தனாவுடன் சேர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.

Deept
Deepti

பேட்டிங்கில் கலக்கிய இந்திய அணி, 171 ரன்களை டிஃபெண்ட் செய்யும் பொறுப்பை பந்துவீச்சாளர்களிடம் கொடுத்தது. ஆரம்பத்தில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த பாகிஸ்தான் பேட்டர்கள், அடுத்த 68 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.

இதற்கு முக்கியக் காரணம் தீப்தி சர்மாவின் மாயாஜால சுழற்பந்துவீச்சுதான். அவர் வீசிய 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் தீப்தி சர்மா.

பேட்டிங்கில் மந்தனாவின் அதிரடி, பந்துவீச்சில் தீப்தியின் சாதனை என முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி, தொடரை மாஸாகத் தொடங்கியிருக்கிறது இந்திய மகளிர் அணி!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User