`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

Jun 19, 2026 - 13:32
0
`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் ராஜதந்திர மற்றும் ராணுவ உதவிகளை இஸ்ரேல் தலைவர்கள் மதிக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரை கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டாகத் தொடங்கின. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்த ராணுவ நடவடிக்கை இரு நாடுகளாலும் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால், ஏப்ரல் 8 அன்று எட்டப்பட்ட பூர்வாங்க போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெடித்தன.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரைத் தொடர விரும்பிய நிலையில், அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்ததும் உலகப் பொருளாதாரத்தைப் பாதித்ததுமான இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் தீவிரம் காட்டினார்.

அதன் அடிப்படையில், இந்த வாரம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெதன்யாகு பகிரங்கமாக விமர்சிக்காத போதிலும், அவரது அமைச்சரவையில் உள்ள சில தீவிரவாதப் போக்குடைய அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான இடாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir), ``அமெரிக்காவின் இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் கட்டுப்படாது. சர்வதேச அழுத்தங்களுக்கு நாங்கள் பணிய மாட்டோம்" என்றார்.

இந்த நிலையில், சமீப நாட்களாக அதிபர் ட்ரம்பும் நெதன்யாகு மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இஸ்ரேல் என்ற நாடு உருவானதற்கே உரிமை கோரும் ட்ரம்ப், நெதன்யாகுவை "பைத்தியக்காரர்" என்று வர்ணித்தார். பேச்சுவார்த்தைகளின் போது இஸ்ரேலை ஓரங்கட்டிய ட்ரம்ப், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

நெதன்யாகு
நெதன்யாகு

இதற்கிடையில், புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து முதன்முறையாகப் பேசிய நெதன்யாகு, "இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகள் கருதி, தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தொடர்ந்து நீடிக்கும். எங்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்ட அமெரிக்க நண்பர்களுடனான உறவைப் பேணுவது முக்கியம், அவர்களின் உதவியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்" என்றார். போரை முழுமையாக நிறுத்தவும் லெபனானின் இறையாண்மையை மதிக்கவும் கோரும் அமைதி ஒப்பந்தத்தை நெதன்யாகுவின் இந்த அறிக்கை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை அதிபர் ஜே.டி.வென்ஸ், ``தற்போது உலக அளவில் இஸ்ரேல் நாட்டின் மீது அனுதாபம் கொண்ட ஒரே அரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும்தான். நான் மட்டும் இஸ்ரேல் அமைச்சரவையில் இருந்திருந்தால், ஒட்டுமொத்த உலகிலும் எனக்கு மீதமிருக்கும் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாட்டை இப்படித் தாக்கிப் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.

ஜே.டி.வான்ஸ்
ஜே.டி.வான்ஸ்

கடந்த மூன்று மாதங்களாக இஸ்ரேலைப் பாதுகாத்த பாதுகாப்பு ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களின் கைகளால் தயாரிக்கப்பட்டு, அமெரிக்க வரிப்பணத்தின் மூலமே வாங்கப்பட்டவை. இஸ்ரேலின் பிரச்னை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அல்ல. அமெரிக்க அதிபர்தான் தங்களது மிகப்பெரிய பிரச்சனை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால், அவர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு தங்களது நாடு தற்போது இருக்கும் நிதர்சனமான சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User