Swiggy: ஒரு மணிநேரத்துக்கு 97,545 ஆர்டர்கள் - இந்தியர்கள் தீபாவளிக்கு அதிகம் ஆர்டர் செய்தது என்ன?

Nov 11, 2026 - 15:01
0
Swiggy: ஒரு மணிநேரத்துக்கு 97,545 ஆர்டர்கள் - இந்தியர்கள் தீபாவளிக்கு அதிகம் ஆர்டர் செய்தது என்ன?

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களை ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி வார இறுதியில், மொறுமொறுப்பான மசாலா தோசை, பனீர் பட்டர் மசாலா மற்றும் காஜு கட்லி ஆகியவை நாடு முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளாக முன்னிலை வகிக்கின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு என பிரத்யேக உணவுப் பழக்கங்கள் இருந்தாலும், இந்த மூன்று உணவுகளும் பொதுவான தேர்வாக இருந்ததை ஸ்விக்கியின் தரவுகள் காட்டுகின்றன.

ஒரு நல்ல உணவு, ரிச்சான கிரேவி மற்றும் இனிப்பு என கொண்டாட்டங்களுக்கு இந்தியர்கள் விரும்பும் அனைத்தையும் இந்த கலவை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இது தென்னிந்தியா முதல் வட இந்தியா வரையிலான உணவு விருப்பங்களின் ஒரு சுவையான சங்கமமாக பார்க்கப்படுகிறது.

இனிப்பு வகைகளில், காஜு கட்லி முதலிடத்தைப் பிடித்து, பண்டிகைக் காலத்தின் மறுக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்துள்ளது. இதைத் தொடர்ந்து மோதிச்சூர் லட்டு, ரசகுல்லா மற்றும் குலாப் ஜாமூன் ஆகிய இனிப்புகளும் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இந்த பண்டிகைக் காலத்தில் உணவு டெலிவரி ஆர்டர்களும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு உணவு டெலிவரி ஆர்டர்கள் 10.7% அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. நவம்பர் 6 முதல் 8 வரையிலான மூன்று நாள் பண்டிகைக் காலத்தில், இந்நிறுவனம் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 97,545 உணவு ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளது.

ஸ்விக்கி

சில வாடிக்கையாளர்கள் தங்களின் கொண்டாட்டத்திற்காக பெரிய தொகையை செலவிட்டுள்ளனர். உதாரணமாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ரூ.41,895 மதிப்புள்ள 57 விதவிதமான இனிப்பு பாக்கெட்டுகளை ஆர்டர் செய்துள்ளார். இதேபோல், மும்பையைச் சேர்ந்த மற்றொரு வாடிக்கையாளர் தீபாவளியன்று ரூ.41,772 செலவில் ஏழு விதமான இனிப்புப் பெட்டிகளை வாங்கியுள்ளார்.

வீடுகளில் ஆர்டர் செய்து சாப்பிடுவது மட்டுமல்லாமல், உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும் போக்கும் இந்த தீபாவளிக்கு அதிகரித்துள்ளது. ஸ்விக்கி டைன்அவுட் (Swiggy Dineout) புக்கிங்குகள் கடந்த ஆண்டை விட 38.5% உயர்ந்துள்ளன. பல குடும்பங்கள் தங்களின் பண்டிகை விருந்தை உணவகங்களில் கொண்டாடத் தேர்ந்தெடுத்துள்ளனர். நவம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் இந்த புக்கிங்குகளில் முன்னணியில் இருந்தன. வளர்ந்து வரும் சந்தைகளில் அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகியவை முதலிடத்தில் இருந்தன.

மும்பையில் நவம்பர் 6-ஆம் தேதி ஒரே பில்லாக ரூ.1,34,210-க்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், குஜராத்தில் குழுவாக உணவருந்தும் வழக்கம் அதிகமாகக் காணப்பட்டது. சூரத் மற்றும் அகமதாபாத்தில் தலா 30 பேர் கொண்ட பெரிய குழுக்கள் உணவகங்களில் முன்பதிவு செய்திருந்தன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User