"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

Apr 25, 2026 - 00:02
 0
"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது...

"இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது.

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள்.

நெதன்யாகு
நெதன்யாகு

உங்களுடன் மூன்று விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

ஒன்று, இறைவனுக்கு நன்றி, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

இரண்டாவது, நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்.

மூன்றாவது, எனது புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்னை இருந்தது. அது முழுமையாக இப்போது குணப்படுத்தப்பட்டுவிட்டது. இறைவனுக்கு நன்றி, அது இப்போது முடிந்துவிட்ட ஒரு விஷயம்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதிலிருந்து வழக்கமான மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறேன்.

கடந்த காலக் கண்காணிப்பின் போது, புரோஸ்டேட் பகுதியில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான மிகச்சிறிய புள்ளி கண்டறியப்பட்டது.

பரிசோதனை செய்ததில், அது ஒரு வீரியம் மிக்கக் கட்டியின் (Malignant tumor) ஆரம்ப நிலை என்பதும், அது உடலின் மற்ற பகுதிகளுக்கு எங்கும் பரவவில்லை என்பதும் தெரியவந்தது.

எனது வயதினரிடையே இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான் என்றும், இதற்கு இரண்டு தீர்வுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள்...

1. இதற்குச் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. கண்காணிப்பில் மட்டும் இருந்தால் போதும். இதனோடு வாழ முடியும், பலர் அவ்வாறே செய்கிறார்கள் என்று சொன்னார்கள்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

2. சிகிச்சை மேற்கொண்டு அந்தப் பிரச்னையை வேரோடு அகற்றுவது.

உங்களுக்கு என்னை பற்றி ஏற்கனவே தெரியும்.

ஏதேனும் சாத்தியமான ஆபத்து குறித்து சரியான நேரத்தில் எனக்குத் தகவல் கிடைத்தால், அதை உடனடியாகச் சரிசெய்யவே நான் விரும்புவேன். இது தேச அளவிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி. அதையே தான் நான் செய்தேன்.

நான் சிகிச்சையை மேற்கொண்டேன். அது அந்தப் பிரச்னையை சிறு தடம் கூட இல்லாமல் நீக்கிவிட்டது.

நான் சில குறுகிய கால சிகிச்சைகளுக்குச் சென்றேன். அந்த நேரத்தில் புத்தகங்கள் வாசித்தேன். எனது பணிகளையும் தொடர்ந்து கவனித்தேன். அந்தப் புள்ளி இப்போது முழுமையாக மறைந்துவிட்டது.

இறைவனுக்கு நன்றி, இதையும் நான் கடந்து வந்துவிட்டேன்.

ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும், அற்புதமான மருத்துவக் குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரேல் குடிமக்களாகிய உங்களிடம் எனக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது - உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முறையாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள், மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்.

இந்தச் சப்பாத் தினத்தின் மாலை வேளையில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயமடைந்த எங்களது வீரர்களின் அமைதிக்காக நான் பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவரின் சார்பாகவும் அவர்களுக்கு எனது அன்பையும், அவர்கள் முழுமையாகக் குணமடைய எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷப்பாத் ஷலோம்."

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0