வைபவ் சூர்யவன்ஷியால் மட்டும் எப்படி முடிகிறது? | Technical Analysis

May 29, 2026 - 09:01
0
வைபவ் சூர்யவன்ஷியால் மட்டும் எப்படி முடிகிறது? | Technical Analysis
ஏப்ரல் 12 - போட்டியின் முதல் ஓவரிலேயே 3 ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர்களை அவுட்டாக்கினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே. 19 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில், இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஒரு பௌலர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது அதுவே முதல் முறை.

ஏப்ரல் 25 - மீண்டும் அதே அணிகள் களமிறங்குகின்றன. பிரஃபுல் ஹிங்கே மறுபடியும் முதல் ஓவரைப் பந்துவீசுகிறார். ஆனால், இம்முறை 3 விக்கெட்டுகள் விழவில்லை. அடுத்தடுத்து இடைவிடாமல் 4 சிக்ஸர்கள் பறக்கின்றன. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பாரபட்சம் பார்க்காமல் அந்த 4 சிக்ஸர்களை ஒவ்வொரு ஏரியாவாகப் பறக்கவிட்டார் வைபவ் சூர்யவன்ஷி. அதே வேகத்தில் விளையாடி 36 பந்துகளில் சதம் அடித்தும் மிரட்டினார்.

வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Sooryavanshi

ஏற்கெனவே இந்த சீசனில் 2 முறை 15 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், இந்தப் போட்டியிலுமே 15வது பந்தில் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். யார் வீசுகிறார், எப்படி வீசுகிறார் என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் விளையாடினார் சூர்யவன்ஷி. ஒவ்வொரு போட்டியிலுமே அப்படித்தான் விளையாடுகிறார்.

பெரிய பெரிய பௌலர்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கிக்கொண்டிருக்கிறார் இந்த 15 வயது சிறுவன். ஒவ்வொரு போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸுக்குப் புயல்வேக தொடக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் எதிர்காலம் என்று கருதப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது சூர்யவன்ஷியின் நிழலில் மறைந்து காணப்படுகிறார்.

வெறும் 15 வயதே ஆன ஒருவரால் எப்படி இவ்வளவு பெரிய அரங்கில் இப்படியொரு செயல்பாட்டைக் கொடுக்க முடிகிறது? இந்த தேசத்தின் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் மனதையும் குடையும் இந்தக் கேள்விக்கான பதிலைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

முதலில் - சூர்யவன்ஷியின் இந்த மகத்தான எழுச்சிக்கு அவரது மனநிலைதான் முக்கியக் காரணம். என்னதான் 14 வயதிலேயே மிகப் பெரிய தொடரில் கால் பதித்துவிட்டாலும், உலகின் கண்கள் மொத்தமும் தன் மீது இருந்தாலும், அவரிடம் எந்த சலனமும் இல்லை.

வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Sooryavanshi

அவர் உண்மையிலேயே யார் பந்துவீசுகிறார் என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை. அர்ஜுனன் கண்ணுக்குக் கிளியின் கண்கள் மட்டுமே தெரிந்ததுபோல், இவருக்குப் பந்து மட்டுமே தெரிகிறது. அதனால் தான் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷார்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், ஜாஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் என யார் பந்து போட்டாலும் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்கவிடுகிறார்.

தன்னுடைய வேலை அடிப்பது மட்டும்தான் என்பது பசுமரத்து ஆணியைப் போல் அந்த பாலகனின் மனதில் அழுத்தமாக இறங்கிவிட்டிருக்கிறது. சொல்லப்போனால், எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவுக்கான அசாத்தியமான ஒரு விஷயமாக அவர் இந்த களத்தைப் பார்க்கவில்லை. அவர் பல ஆண்டுகளாகவே இதற்காகத்தான் தயாராகியிருக்கிறார். இதற்குத் தான் உரித்தானவன் என்று நினைக்கிறார். அதனால் தான் அவரால் இயல்பாக இருக்க முடிகிறது. இந்த மிகப் பெரிய தொடரும், அதன் கவர்ச்சியும் எந்த வகையிலும் அவரை பாதிக்காமல் இருக்கிறது.

அவர் இதற்காகத்தான் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார் என்று சொல்லும்போது, அதை எப்படி எப்படிச் செய்தார் என்றும் பார்ப்போமே.

சிறு வயதில் மனிஷ் குமார் ஓஜாவிடம் பயிற்சி எடுத்தபோது ஒரு நாளுக்கு சுமார் 600 பந்துகளைச் சந்தித்திருக்கிறார் சூர்யவன்ஷி. இப்போதே சிறு வயதுதானே என்று யோசிக்கலாம்! அதாவது சுமார் 9 - 10 வயது முதலே. மற்ற சிறுவர்கள் பயிற்சியின்போது ஒரு நாளுக்கு சுமார் 250 பந்துகளைச் சந்தித்துக்கொண்டிருக்க, இவர் அதை விட இரண்டு மடங்குக்கும் மேல் சந்தித்திருக்கிறார்.

வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Sooryavanshi

சிறிய வயதிலேயே மணிக்கு 140 - 150 கிலோமீட்டர் வேகத்தில் 'த்ரோ டவுன்' பந்துகளைச் சந்தித்து தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலைப்பயிற்சியிலும் கூட ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளரை விருப்பப்பட்டு எதிர்கொள்கிறார் இந்த பாலகன். பவுன்சர் வீசச் சொல்லி விரும்பி ஆடுகிறார். முன்னணி வீரர்களே நெட் செஷன்களில் பவுன்சர்களை விரும்பமாட்டார்கள். ஆனால், 15 வயது சூர்யவன்ஷி அதைப்பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

இப்படி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தயாராக்கிக்கொண்டதால்தான் பும்ரா, போல்ட், கம்மின்ஸ் என உலகத்தர பௌலர்களை அவரால் சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது.

சரி, இப்போது டெக்னிக் பக்கம் வருவோம். சூர்யவன்ஷி பேட்டைப் பிடிப்பதே சற்று வித்தியாசமானது. வழக்கமாக எல்லோரும் `வி கிரிப்' பிடித்து ஆடுவார்கள். அதாவது கட்டை விரலும் மற்ற விரல்களும் ஆங்கில எழுத்தான `வி' போன்ற வடிவத்தில் பிடிக்கப்பட்டிருக்கும். ஆனால், சூர்யவன்ஷி அப்படிப் பிடிப்பதில்லை. பேஸ்பால் வீரர்கள் பிடிப்பதுபோல் முழுமையாக கிரிப்பை சுற்றிப் பிடிக்கிறார். கிட்டத்தட்ட `ஓ' வடிவம் போல. அதனால் அவர் பேட்டை சுழற்றுவதுமே பேஸ்பால் பேட்டை சுழற்றுவதுபோல் அதீத பலத்துடன் இருக்கிறது. அதனால்தான் அவரால் எளிதாகப் பெரிய சிக்ஸர்களை அடிக்க முடிகிறது.

கிரிப் மட்டுமல்லாமல் அவரது 'bat lift' கூட அதற்கு உதவுவதாக இருக்கிறது. பந்து வீசப்படும்போது பிரயன் லாரா போல் நன்கு பேட்டை தூக்கிப் பிடிக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. அது அவருடைய தோள்பட்டை உயரம் வரை உயர்கிறது. மேலும், பந்து தன்னை நோக்கி வருவதற்குள் ஒருமுறை பேட்டை கீழே கொண்டுவந்து மேலே எடுத்துச் செல்கிறார் அவர். அதனால் அவரால் கூடுதல் விசையை உருவாக்க முடிகிறது. அப்படிக் கூடுதலாக விசையை உருவாக்கி, பேஸ்பால் போல் பேட்டை சுழற்றுவதால் அவரால் உச்சபட்ச பலத்தை உருவாக்க முடிகிறது. அதனால், அவர் பேட்டில் படும் பந்துகள் அனைத்துமே தெறிக்கின்றன.

வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Sooryavanshi

நேற்றைய போட்டியில் பிரஃபுல் ஹிங்கேவின் முதல் ஓவரில் அவர் அடித்த 2 ஷாட்கள் இந்த பலத்தின் காரணமாகவே சிக்ஸர் ஆகின. அந்த ஓவரில் சூர்யவன்ஷி அடித்த இரண்டாவது சிக்ஸர் மிகப் பெரிய டாப் எட்ஜ் ஆனதுபோல் இருந்தது. பந்து பெரும் உயரம் சென்றது. பெரும்பாலான பேட்டர்கள் அடித்திருந்தால் அது கேட்ச் ஆகியிருக்கும். ஆனால், சூர்யவன்ஷியின் பலம் அதை பவுண்டரிக்கு வெளியே அனுப்பியது. அதேபோல்தான் நான்காவது பந்தும். அது நன்றாக பேட்டின் மையப் பகுதியில் படவில்லை. இருந்தாலும் லாங் ஆன் திசையில் சிக்ஸ் ஆனது. ஓரளவு பெரிய மைதானங்களில் ஒன்றிலேயே, அவர் பேட்டில் நன்றாகப் படாத பந்துகள் கூட சிக்ஸர் ஆகின்றன என்றால், அது பெரும் பலம் கொடுத்து அடிக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லவா!

இதோடு அவர் பந்தின் லென்த்தையும் சீக்கிரமே கணித்துவிடுகிறார். அவர் மேற்கொண்ட அதீத பயிற்சிகள் அதை எளிதாக்குகின்றன. கூடுதல் வேகத்தோடு வரும் பந்துகளையும் அவரால் சரியாகக் கணிக்க முடிகிறது. இதனால், அவர் அந்தப் பந்துகளுக்குச் சற்று தாமதமாக எதிர்வினையாற்ற முடிகிறது. அந்தப் பந்துக்கு ஏற்ற சரியான ஷாட்டைத் தேர்வு செய்து விளையாட முடிகிறது.

இன்றைய மாடர்ன் கிரிக்கெட்டில் பல்வேறு வீரர்கள் இப்படி பேஸ்பால் ஸ்விங் மூலம் பெரிய ஹிட்டர்களாக வலம் வருகிறார்கள். இரு சீசன்கள் முன்பு பௌலர்களை பயமுறுத்திய ஆஸ்திரேலிய ஓப்பனர் ஜேக் ஃப்ரேஸர் மெக்கர்க் அதற்கு ஒரு உதாரணம். ஆனால், அப்படியான வீரர்களிடமிருந்து சூர்யவன்ஷியை சற்று வித்தியாசப்படுத்துவது அவரது மணிக்கட்டு!

வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Sooryavanshi

சேவாக் போன்ற ஒரு வீரர் மணிக்கட்டுகள் மூலமாகவே மேஜிக் நிகழ்த்தியதைப் பார்த்திருக்கிறோம். அதேபோன்ற ஒரு திறமை சூர்யவன்ஷியிடமும் இருக்கிறது. தன் மணிக்கட்டுகளை வளைப்பதின் மூலம் பல்வேறு ஏரியாக்களுக்கு அவரால் பந்துகளை அனுப்ப முடிகிறது. பந்துகளைத் தாமதமாக ஆடவும் அது அனுமதிக்கிறது. அதனால், சரியான ஷாட்களைத் தேர்ந்தெடுத்து, அதற்குச் சரியான ஒரு திசையையும் கொடுக்கிறார் சூர்யவன்ஷி. அதனால் தான் அவரால் சீராக அதிரடியை வெளிப்படுத்திக்கொண்டே இருக்க முடிகிறது.

இந்த பேஸ்பால் ஸ்விங் ஒரு விஷயத்தை கடினப்படுத்தும் - டிஃபன்ஸ். இந்த காலகட்டத்தில் டி20 போட்டிகளில் அது தேவையா என்ற கேள்வியே வலுத்துவருகிறது. இருந்தாலும், அது அவசியம்தான். அதேசமயம், முற்றிலும் டிஃபண்ட் செய்ய முடியாத ஆளாகவும் சூர்யவன்ஷியைக் கருத முடியாது. தாமதமாக, மணிக்கட்டுகளைப் பயன்படுத்தி ஆடக்கூடிய அவரது திறமை டிஃபன்ஸ் ஆடுவதற்கும் வழிவகுக்கும். இன்னும் நாள்கள் செல்லச்செல்ல அது இன்னும் மேம்படவே செய்யும். அதனால், அவரது அதிரடியும் இன்னும் மேம்படும். அதுதான் பௌலர்களுக்கு இன்னும் அச்சுறுத்தலான விஷயம்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User