RCB: "கிரிக்கெட் மீது எனக்கு இருக்கும் தீராத காதலே என்னை இன்றும் இயக்கி வருகிறது" - ஆட்டநாயகன் கோலி

May 14, 2026 - 12:01
0
RCB: "கிரிக்கெட் மீது எனக்கு இருக்கும் தீராத காதலே என்னை இன்றும் இயக்கி வருகிறது" - ஆட்டநாயகன் கோலி

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற கொல்கத்தா vs பெங்களூரு போட்டியில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் விராட் கோலி.

இவரின் இந்த சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி, 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது பெங்களூரு அணி.

விராட் கோலி
விராட் கோலி

வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, "இந்த 9-வது சதம் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் நான் அதை பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஏனென்றால் தற்போது புள்ளிப் பட்டியலில் எங்களுக்கு ஒவ்வொரு புள்ளியும் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.

அணிக்காகப் பங்களிப்பது மற்றும் நான் நீண்ட நேரம் களத்தில் நின்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்து விளையாடுவது எனது கடமை. கடந்த இரண்டு போட்டிகளில் நான் சரியாக ரன் எடுக்காதது என்னை ஒருவிதத்தில் பாதித்தது, சதம் அடிக்கிறோமா இல்லையா என்பதை விட, ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து அந்த 2 புள்ளிகளைப் பெறுவதே எனக்கு முக்கியம்.

அழுத்தம் என்பது ஒரு கௌரவம் போன்றது, அதுதான் உங்களை அடக்கமாக இருக்க வைக்கிறது, பயிற்சியில் இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. நாம் நன்றாக விளையாடும் போது சில சமயம் கவனக்குறைவாக இருக்க வாய்ப்புண்டு, ஆனால் தோல்விகளும் அழுத்தமும் நம்மை மீண்டும் ஒரு சிறந்த வீரராக மாற்றும்.

இந்த ஆட்டத்தில் தேவையற்ற ரிஸ்க் எடுக்காமல் பந்துகளை கேப்களில் தட்டிவிட்டது எனக்கு மிகுந்த திருப்தியைத் தந்தது. எப்போது பவுண்டரி அடிக்க வேண்டும், எப்போது ஓடி ரன்கள் எடுக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

விராட் கோலி
விராட் கோலி

சாதனைகளைப் பற்றி எனக்குப் பெரிய கவலையில்லை, கிரிக்கெட் மீது எனக்கு இருக்கும் தீராத காதலே என்னை இன்றும் இயக்கி வருகிறது. களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் எனது ஆன்மாவைத் தந்து விளையாடுகிறேன்.

ஏனென்றால் இது ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது எனக்குத் தெரியும். அதுவரை ஒவ்வொரு சூழலையும் சவாலாக ஏற்று ரசித்து விளையாட விரும்புகிறேன். பேட்டின் நடுவில் பந்து படும்போது கிடைக்கும் அந்த மகிழ்ச்சியே எனக்குப் போதும். எல்லாம் இறைவனின் அருள், அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User