வெப்ப அலை, ஏசி வாழ்க்கை... கோடையில் கண்களுக்கு இரட்டை ஆபத்து!
கடந்த சில நாள்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகி, சில இடங்களில் வெப்ப அலையும் பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, வேலூர், திருத்தணி, கரூர் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 40° செல்சியஸை தாண்டியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தாலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெப்பம் நீடித்தே வருகிறது. மேலும் சில நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும், கோடை காலம் கூடுதல் நாள்கள் நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அதீத வெப்பம், உடல் சோர்வு, மயக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் நிலையில், கண் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி பேசிய சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் இ.ரவீந்திர மோகன், "கடந்த சில வாரங்களாகக் கடுமையான கோடை கால வெப்பமும், அதிகப்படியான ஈரப்பதமும் நிலவி வருகிறது. இந்த வானிலையால் ஏற்படும் அசௌகரியங்களுடன், கண்களில் ஒவ்வாமை (Allergy), வறட்சி , எரிச்சல், கண் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல் மற்றும் கண் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
கண்ணீர் படலம் பாதிப்பு
அதிகப்படியான வெப்பம் மற்றும் வறண்ட வானிலை கண்களை இயற்கையாகப் பாதுகாக்கும் கண்ணீர் படலம் (Tear film) பாதிக்கப்படலாம். மேலும், கண்களில் காணப்படும் கண்ணீர் வேகமாக ஆவியாவதால் கண் எரிச்சல், உறுத்தல், கண் சிவத்தல் போன்ற கண் வறட்சிக்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, அனல் காற்று, அதிக நேரம் ஏசியில் இருப்பது போன்றவை இந்தப் பிரச்னைகளை மேலும் மோசமாக்கலாம்.

கோடைக் காலத்தில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்னை கண் ஒவ்வாமை. மகரந்தத் துகள்கள் (Pollen), தூசி, புகை போன்ற ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகள் கண்களில் படும்போது ஒவ்வாமை ஏற்படலாம். ஒவ்வாமை ஏற்படும்போது கண்களில் வீக்கமும் வலியும் ஏற்படலாம். வெப்பமான காலநிலையில் தூசி மற்றும் காற்றில் பரவும் பிற ஒவ்வாமை காரணிகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
கான்டாக்ட் லென்ஸ்
கண்களில் அரிப்பு, எரிச்சல், சிவத்தல், இமை வீக்கம், நீர் வடிதல், பீளை, அடிக்கடி கண்களைத் தேய்ப்பது இதன் அறிகுறிகளாகும். குறிப்பாகக் குழந்தைகள், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள், ஏற்கெனவே ஒவ்வாமை பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வெயிலில் நேரத்தைச் செலவிடுபவர்களுக்கு இந்தப் பிரச்னை எளிதில் ஏற்படலாம்.

வீட்டுக்குள் இருந்தாலும்...
வீட்டுக்குள் இருக்கும் சமயங்களில், கணினி மற்றும் மொபைல் திரைகளைப் பார்க்கும் நேரம் அதிகரிப்பதால் கண் சோர்வு (Digital eye strain) ஏற்பட வாய்ப்புள்ளது. மொபைல், கணினி, லேப்டாப் போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண்களை சிமிட்டும் வேகம் குறைகிறது. இதனால் கண்ணீர் மேலும் ஆவியாகி, கண் வறட்சியை மோசமாக்குவதுடன் கண் சோர்வையும் ஏற்படுத்தலாம்.
எளிய தடுப்பு முறைகள்
பயணத்தின்போது, வெளியில் செல்லும்போது புற ஊதாக்கதிர் (UV) பாதுகாப்பு கொண்ட சன் கிளாஸ் அணிய வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். முதியோருக்கு ஒருநாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஏசி அறைகளில் பணிபுரிபவர்களுக்குத் தாகம் எடுக்காமல் போகலாம். எனவே அவர்கள் போதுமான அளவு திரவ ஆகாரங்களை அருந்துவதை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
வீடு திரும்பிய பின், முகத்தைச் சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும். கண்களில் வலியோ அல்லது கடுமையான அரிப்போ ஏற்பட்டால், குளிர்ந்த குடிநீரால் கண்களைக் கழுவுவதும், மூடிய கண் இமைகளின் மேல் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதும் நல்ல பலனைத் தரும்.
அடிக்கடி கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாகக் சொட்டு மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மருத்துவர் பரிந்துரையின்றி கண் சொட்டு மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தும்போது, பாதிப்பை மேலும் மோசமாக்குவதோடு, சரியான நோயறிதலைத் தாமதப்படுத்தவும் கூடும். எனவே, அறிகுறிகள் நீடித்தால் உடனியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.

மொபைல், கணினிகளை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது ஏற்படும் கண் சோர்வு மற்றும் வறட்சியைத் தடுக்க, 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, திரையைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்குப் பார்க்க வேண்டும். திரைகளைப் பார்க்கும்போது அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு 10-15 முறை கண்களை சிமிட்டுவது இயல்பானதாகும்" என்கிறார் மருத்துவர் இ.ரவீந்திர மோகன்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)