நடிகர் சாயாஜி ஷிண்டே: தாயின் அன்புக்காக 6.5 லட்சம் மரங்கள் வளர்த்த `பசுமை நாயகன்!’
சினிமா உலகில் பல நடிகர்கள் புகழுக்காகவும், பணத்திற்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், திரைக்கு அப்பால் சமூகத்தின் மீதும் இயற்கையின் மீதும் தீராத அக்கறை கொண்ட ஒரு கலைஞன் இருக்கிறார். அவர்தான் பல மொழிகளில் மிரட்டலான வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்படும் சாயாஜி ஷிண்டே. நடிகராக மட்டும் அறியப்பட்ட இவர், இன்று மகாராஷ்டிராவின் பசுமைப் புரட்சியாளராக உருவெடுத்துள்ளார். தனது தாயின் நினைவைப் போற்றவும், வறட்சியால் வாடும் பூமிக்கு உயிர் கொடுக்கவும் அவர் மேற்கொண்ட ‘சஹ்யாத்ரி தேவ்ராய்’ எனும் மரம் நடும் இயக்கம், நவீன காலத்திற்குத் தேவையான ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

இந்த மாபெரும் மரம் நடும் திட்டத்தின் விதை, அவரது தாயார் மீதான அன்பில் இருந்து உருவானது. 2016-ம் ஆண்டில் அவரது தாயாருக்கு 92 வயது. தாயின் முதுமையைக் கண்டு கலங்கிய அவர், தாயின் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக, தனது தாயின் எடைக்கு நிகரான விதைகளை வாங்கி மகாராஷ்டிரா முழுவதும் நட முடிவு செய்தார். "இந்த விதைகள் மரமாகி, பூத்து, காய்த்து, நிழல் தரும் போது, அவற்றின் வாசனையிலும் நிழலிலும் என் தாயின் இருப்பை நான் என்றென்றும் உணர்வேன்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். அவருடைய ஆசையும் கனவும் தற்போது நிறைவேறியுள்ளது.
சாயாஜி ஷிண்டேவின் இந்த பயணத்திற்கு மற்றொரு முக்கிய காரணம், 2016-ல் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடுமையான வறட்சி. வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உதவச் சென்றபோது, சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு மரத்தடி நிழல் கூட இல்லாமல் மக்கள் திறந்தவெளியில் கூடியிருந்ததைக் கண்டார்.
பல கோடிகளுக்கு நிலம் வைத்திருப்பதாகப் பெருமைப்படும் பணக்காரர்களைப் பார்த்த அவர், "மனிதர்களின் துயரத்தைத் துடைக்காத செல்வத்தால் என்ன பயன்?" என்று கேட்டார். கிராம மக்களுக்கு உண்மையாக உதவ வேண்டுமானால், அதற்கான முதல் படி மரங்களை நடுவதே என்பதை உணர்ந்து தனது முதல் 5,000 மரக்கன்றுகளை நட்டு இந்தச் செயலில் இறங்கினார்.

மரங்களை நடுவதற்காகவே சஹ்யாத்ரி தேவ்ராய் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை (NGO) அவர் தொடங்கினார். மகாராஷ்டிராவில் உள்ள மலைப்பகுதிகளில் கிராம மக்களால் தெய்வத்தின் பெயரால் பாதுகாக்கப்படும் `புனித தோப்புகள்' தேவ்ராய் எனப்படுகின்றன. இந்தப் பழமையான காடு வளர்ப்பு முறையை மீண்டும் உயிர்ப்பிப்பதே இவரது நோக்கம்.
ஆலம், அரச, புளிய மரங்கள் போன்ற 6.5 லட்சத்திற்கும் அதிகமான நாட்டு மரங்களை மகாராஷ்டிரா முழுவதும் 48 வெவ்வேறு இடங்களில் இவரது அமைப்பு நட்டு பராமரித்து வருகிறது. மரங்களை நடுவதோடு மட்டுமல்லாமல், சாலை விரிவாக்கம் போன்ற காரணங்களுக்காக வெட்டப்பட இருந்த 200-க்கும் மேற்பட்ட பெரிய ஆலமரங்களை வேரோடு பெயர்த்து (Tree Transplantation), பாதுகாப்பான வேறு இடங்களில் நட்டு அவற்றுக்கு மறுஉயிர் கொடுத்துள்ளார்.
சாயாஜி ஷிண்டேவின் பின்னணி மிகவும் சாதாரணமானது. அவர் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1978-ம் ஆண்டு ஒரு அணை திட்டத்திற்காக அரசாங்கம் இவர்களது நிலத்தை கையகப்படுத்தியது (அதற்கான மாற்று நிலம் 34 ஆண்டுகள் கழித்து 2022-ல் தான் இவருக்குக் கிடைத்தது).

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நீர்ப்பாசனத் துறையில் காவலாளியாக வேலை பார்த்தவர். பல தசாப்தங்களாக சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தாலும், "எல்லோரும் பெயரையும் புகழையும் சம்பாதிக்க விரும்புகிறார்கள். ஆனால் நான் புகழைத் தாண்டி அர்த்தமுள்ள ஒன்றைச் செய்ய விரும்பினேன்" என்கிறார் சாயாஜி ஷிண்டே.
திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தையும் புகழையும், மண்ணையும் மக்களையும் காப்பதற்காகச் செலவிடும் சாயாஜி ஷிண்டே, திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் சிறந்த `பசுமையான’ மனிதர்தான்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)