Happy Raj Review: கலகல காதலோடு ஒரு சோசியல் மெசேஜ்; ஆனாலும் 'ஹேப்பி ராஜ்' சறுக்கியது எப்படி?

Mar 27, 2026 - 18:01
 0
Happy Raj Review: கலகல காதலோடு ஒரு சோசியல் மெசேஜ்;  ஆனாலும் 'ஹேப்பி ராஜ்' சறுக்கியது எப்படி?

ஊரில் உள்ள பலராலும் உருவக் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் காத்த முத்து ( ஜார்ஜ் மரியம்). தன் தந்தையால் தானும் கேலி செய்யப்படுக்கிறார் காத்த முத்துவின் மகன் ஹேப்பி ராஜ் ( ஜி.வி பிரகாஷ் குமார்). தான் நேசிக்கும் பெண்ணிடம் தன் காதலைச் சொல்கிறார் ஹேப்பி ராஜ். அவரைப் பிடித்திருந்தும், அவர் தந்தையை ஊரே கேலி செய்கிற காரணத்தால் காதலை மறுதலிக்கிறார்.

இதனால் மனமுடையும் ஹேப்பி ராஜ் தன் தந்தையயை விட்டு விலகியிருக்க விரும்பி பெங்களூருவுக்கு வேலைக்குச் செல்கிறார். அங்கு அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் பணக்காரப் பெண்ணான காவியாவைக் (ஸ்ரீ கெளரி ப்ரியா) காதலிக்கிறார். அவரும் காதலை ஏற்றுக்கொள்கிறார்.

Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்
Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்

அதைத் தொடர்ந்து, காவியாவின் அப்பா ராஜீவ்வைச் (அப்பாஸ்) சந்திக்க, காத்த முத்து பெங்களூரு வருகிறார். அப்போது நடக்கும் பிரச்னையால் காதலில் விரிசல் விழ, அதைச் சரிகட்ட ஹேப்பி ராஜ் என்னென்ன செய்தார் என்பதை காமெடி மற்றும் எமோஷன் கலந்து பல தடுமாற்றங்களுடன் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன்.

ஹேப்பி ராஜாக ஜி.வி. பிரகாஷ் குமார் நண்பர்களோடு சேர்ந்து லூட்டியடிப்பது, காதலியிடம் உருகுவது எனத் தன் வழக்கமான அதே உடல் மொழி, நடிப்பு, நடனமெனப் பழக்கப்பட்ட அதே ஜி.வியாக நடித்திருக்கிறார். அதேநேரம், எமோஷனில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

காவியாவாக ஸ்ரீ கெளரி ப்ரியா ஜி.வி பிரகாஷை மார்டன் இளைஞனாக மாற்றுவது, தன் அப்பாவின் மனம் குறித்து அறிந்து காதலனின் குடும்பத்திடம் சென்று காதல் கைக்கூட முயற்சிகள் எடுப்பது எனக் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

காத்த முத்துவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியம்தான் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். கதையும் அவரை மையப்படுத்தியே நகர்கிறது. அதன் பொறுப்புணர்ந்து கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். தனக்கு மகன் பிறந்தபோது அடைகிற உணர்விலும், இறுதிக்காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்
Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்

நீண்ட நாள்களுக்குப் பிறகு ராஜீவ்வாகவே கம்பேக் கொடுத்திருக்கும் அப்பாஸ் சர்ப்ரைஸான என்ட்ரியாக இருந்தாலும், பழக்கப்பட்ட அதே கார்பரேட் அப்பாவாகவே வருகிறார். சில இடங்களில் மட்டும் அவரது அனுபவமிக்க நடிப்பு வெளிப்படுகிறது. மதுரை முத்து, அதிர்ச்சி அருண், கீதா கைலாசம் எனப் பலரும் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்' பாடலும், கிளைமாக்ஸ் பாடலும் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் ஆங்காங்கே கைகொடுத்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும், பெங்களூரு 'வைப்'பும் கச்சிதமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. எடிட்டர் ஆர்.கே. செல்வா தன் அனுபவத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.

பேச வேண்டிய மிகவும் முக்கியமான கதைக்கருவைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர், அதை வெளிப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நினைத்ததைச் செய்திருக்கிறார்.

உருவக்கேலிக்கு எதிராகப் பேச முயலும் இயக்குநர், முதல்பாதியில் காத்து முத்து கதாபாத்திரத்தைக் காட்சிப்படுத்திய விதத்தில் கண்ணியக்குறைவாக உருவக்கேலியோடு காட்சிப்படுத்தியது ஏனோ? மேலும், வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த கேலி, கிண்டலை வைத்திருப்பதும் அபத்தம்.

Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்
Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்

அதுவும் கேலியாகக் குறிப்பிடும் காட்சியில் குதிரை கணைப்பதாக வரும் இசையைத் தவிர்த்திருக்கலாம். கதையின் மையத்தை நோக்கி முதல் காட்சியிலேயே தொடங்கும் படம், எங்கெங்கோ பயணித்து கதையின் முக்கிய உரையாடலைப் பேசுவதற்குள் தொய்வு ஏற்படுகிறது.

மேலும், வழக்கொழிந்து போன சமூக வலைத்தளம், டிக்டாக் காமெடிகளையும் தவிர்த்திருக்கலாம்.

திரைக்கதையின் நீளமும் கதையின் ஆழத்தைச் சோதிக்கிறது. ஒன்லைன் வசனங்கள் அவ்வப்போது ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் எடுபடவில்லை.

Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்
Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்

தான் எடுத்துக்கொண்ட கதையின் ஒன்லைனுக்காகக் கவனிக்கப்பட்டாலும், திரைக்கதையில் முரணான விஷயங்களைத் தவிர்த்து அழுத்தமாகச் சொல்லியிருந்தால் இந்த ஹேப்பி ராஜ் பெயருக்கேற்றது போல் கலகலப்பூட்டியிருக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0