``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

Aug 08, 2026 - 12:32
0
``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார்.

1949-ல் சென்னையில் பிறந்த இவர், ரயில்வே துறையில் பயணச்சீட்டு பரிசோதகராகத் வேலையைத் தொடங்கினார். பின்னர் சினிமா மீது கொண்ட ஈர்ப்பால், 1969-ல் பாபு இயக்கத்தில் வெளியான 'புத்திமந்துடு' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் 40-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த ரங்கநாத், பின்னாளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் ஜொலித்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இவரது திரையுலக வாழ்க்கையில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ரங்கநாத்
நடிகர் ரங்கநாத்

திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்த ரங்கநாத்திற்கு, 2009-ம் ஆண்டு அவரது மனைவி மறைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. மனைவியின் பிரிவால் அவர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதன் காரணமாக அவர் அடிக்கடி தற்கொலை பற்றிப் பேசத் தொடங்கியதால், அவரது குடும்பத்தினர் அவரை உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்று மனநல ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள காந்திநகர் இல்லத்தில் வசித்து வந்த ரங்கநாத், 2015 டிசம்பர் 19 அன்று மதியம் உணவை முடித்த பின் தனிமையில் இருந்தார். ஆறு வருடங்களாக ரங்கநாத் மற்றும் அவரது மனைவியை மிகவும் கவனமாகப் பராமரித்து வந்த பணிப்பெண் மீனாட்சிதான் அவரை இறுதியாகப் பார்த்தவர். மாலையில் அவரைச் சந்திக்க வந்தவர்கள் கதவைத் தட்டியும் பதிலில்லாததால், அருகில் வசித்த அவரது மகள் நீரஜாவுக்குத் தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரங்கநாத் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழப்பதற்கு முன் அவர் தனது நண்பர்களுக்கு "குட்பை" செய்திகளையும் அனுப்பியிருந்தார்.

நடிகர் ரங்கநாத்
நடிகர் ரங்கநாத்

அவரது அறையில் தனியாகக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், அங்குள்ள சுவரில் 'destiny' என்று எழுதியிருந்தார். மேலும், "இதை பணிப்பெண் மீனாட்சியிடம் கொடுத்துவிடுங்கள், அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்" எனத் தெலுங்கில் எழுதி, தன் சேமிப்பு பத்திரங்களை பணிப்பெண்ணிடம் ஒப்படைக்குமாறு குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.

ரங்கநாத்திற்கு நீரஜா தவிர மற்றொரு மகளும் ஒரு மகனும் இருந்தனர். தந்தை மறைந்த பிறகு, அவரது கடைசி ஆசையை மதித்து நிறைவேற்றக் குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆறு ஆண்டுகள் தங்களுக்கு உண்மையாகவும் துணையாகவும் இருந்த பணிப்பெண் மீனாட்சியிடமே தந்தையின் சேமிப்பு அனைத்தையும் ஒப்படைப்பதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்திருக்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User