கேரளம்: வாழைத்தார்களில் MDMA போதைப்பொருள் கடத்தல்; மாநில விருது பெற்ற முன்மாதிரி விவசாயி கைது
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள பாயிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் 'டேனி' என்றழைக்கப்படும் தனேஷ் எஸ். நாயர் (31). தனேஷ், 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஜெர்மனியில் தங்கி வேளாண் வணிகம் பயின்றவர்.
2018-ல் கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பின் ஊருக்கு திரும்பிய அவர், கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு பகுதியில் பெரிய அளவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து வாழைத்தோட்டங்கள் அமைத்து விவசாயம் செய்துவந்தார். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தியதற்காக இவருக்கு 2023-ம் ஆண்டு கேரள மாநில அரசின் 'சிறந்த இளம் விவசாயிக்கான விருது' வழங்கப்பட்டது.
அதே சமயம் தனேஷ் விவசாயி என்ற அடையாளத்தை முகமூடியாகப் பயன்படுத்தி தனது தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களுக்குள் ரசாயனப் போதைப்பொருட்களைப் பொட்டலங்களாக மறைத்து வைத்து லாரிகள் மூலம் கேரளாவுக்குக் கடத்தி வருவதாக கேரள போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் ஆலுவா டி.எஸ்.பி பைஜு பவுலோஸ் தலைமையிலான தனிப்படை போலீஸார் அங்கமாலியில் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அதில் லாரியில் வந்த வாழைத்தாரில் போதைப்பொருட்கள் கடத்திய தனேஷ் பிடிபட்டார். அவரிடமிருந்து 803 கிராம் ஹாஷிஷ் ஆயில் மற்றும் 8 கிராம் எம்.டி.எம்.ஏ ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கு முன் ஆலுவாவில் 185 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளுடன் ஹரிகிருஷ்ணன் என்பவரும், தோப்பும்படியில் 7 கிராம் போதைப்பொருளுடன் ஷினு செபஸ்டியன் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஹரிகிருஷ்ணனின் செல்போன் உரையாடல்கள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகளை ஆய்வு செய்தபோதே, விவசாயி தனேஷ் போதைப்பொருள் கடத்தும் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தனேஷைக் கைது செய்தனர்.

தனேஷின் செல்போனைப் பரிசோதித்ததில், வாழைத்தார்களுக்குள் போதைப்பொருளைப் பதுக்கி வைக்கும் செயல்முறைகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக நடந்த நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்ஸ்டாகிராம் மூலமாக உள்ளூர் விநியோகஸ்தர்களுக்குத் தகவல் தெரிவித்து, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)