ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து மீட்ட காவல்துறை

May 15, 2026 - 13:01
0
ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து மீட்ட காவல்துறை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14). இவர், மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், தனுசியா காருகுடி - கருப்பம்பட்டி சாலையில் உள்ள வயல்வெளிப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்களின் புகாரைத் தொடர்ந்து, தா.பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வன், சஞ்சீவி உள்ளிட்ட போலீஸார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறுமி வைத்திருந்த செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது, சிக்னல் காட்டிய குறிப்பிட்ட விளைநிலப் பகுதிக்கு போலீஸார் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்றனர்.

thanusiya

அங்குள்ள ஒரு விவசாயக் கிணற்றை எட்டிப் பார்த்தபோது, சிறுமி தனுசியா கிணற்றின் உட்புறத் திட்டில் உயிருக்குப் பயந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, கிராம மக்கள் கிணற்றில் இறங்கி மீட்க முயன்றும் ஆழம் காரணமாக அது தோல்வியில் முடிந்தது.

உடனடியாக முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உயர்திறன் கொண்ட மின்விளக்குகள் மூலம் கிணற்றுக்குள் வெளிச்சம் பாய்ச்சி, சிறுமிக்கு தைரியம் கூறினர். பின்னர், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள், சுமார் 7 மணி நேரமாக கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த சிறுமியையும், அங்கிருந்த ஆட்டுக்குட்டியையும் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுமி, "ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு ஆட்டுக்குட்டி தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அதை மீட்க நான் கீழே இறங்கியபோது நிலைதடுமாறி உள்ளே விழுந்துவிட்டேன். கையில் இருந்த செல்போனும் விழுந்ததால் யாரிடமும் பேச முடியவில்லை. கிணற்றில் தண்ணீர் இல்லை. உயிருக்குப் பயந்து திட்டில் ஏறி நின்றுகொண்டேன். கத்தி உதவிக்கு அழைத்து பார்த்தேன். ஆனால், கிணற்றை சுற்றி அருகில் யாரும் இல்லாததால், உதவிக்கு யாரும் வரவில்லை. இந்நிலையில்தான், செல்போன் சிக்கினால் மூலம் என்னை வந்து மீட்டனர்" என்றார்.

இதற்கிடையில், சிறுமி காயமின்றி மீட்கப்பட்டதில் செல்போன் சிக்னல் முக்கியப் பங்கு வகித்தது. துரிதமாகச் செயல்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய தா.பேட்டை போலீஸார் மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User