`7 வயதில் கிடைத்த பரிசு' - 73 வயதில் மருத்துவரான பாட்டி! - சாதிக்க வயது ஒரு தடையல்ல

May 15, 2026 - 13:01
0
`7 வயதில் கிடைத்த பரிசு' - 73 வயதில் மருத்துவரான பாட்டி! - சாதிக்க வயது ஒரு தடையல்ல

`முயற்சி திருவினையாக்கும்' என்பார்கள். இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் வயது என்பது வெறும் எண்கள்தான் என்பதை உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் 73 வயது மூதாட்டி டான் சூட்கீஸ்ட்-கிராஃப்ட் (Dawn Zuidgeest-Craft). ஓய்வு பெற்று நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டிய வயதில், சவால்கள் நிறைந்த மருத்துவப் படிப்பை மேற்கொண்டு, இன்று அவர் ஒரு மருத்துவராக உருவெடுத்துள்ளார்.

டான் சூட்கீஸ்ட்-கிராஃப்ட் சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டவர். அவருக்கு 7 வயது இருக்கும் போது பரிசாக கிடைத்த ஒரு நுண்ணோக்கி அவரது மனதில் மருத்துவ ஆசையை ஆழமாக விதைத்தது. பெரியவரானதும், அவர் ஒரு செவிலியராகவும் குழந்தைகளுக்கான மருத்துவப் பயிற்றுவிப்பாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் பிறந்ததால், தனது குடும்பத்தின் நலனுக்காக தனது மருத்துவக் கல்லூரிச் செல்லும் ஆசையைத் தள்ளிவைத்தார். நாற்பது வயதில் மருத்துவம் படிக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில், அவரது வாழ்க்கை வேறு திசையில் பயணித்ததால், அந்தக் கனவு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது.

டான் சூட்கீஸ்ட்-கிராஃப்ட்
டான் சூட்கீஸ்ட்-கிராஃப்ட்

2020-ல், அவரது கணவர் கார்ல் கிராஃப்ட் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவினால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டார். இந்தச் சம்பவம் அவர்கள் இருவருக்கும் வாழ்க்கை மிகக் குறுகியது, அதை வீணாக்கக்கூடாது என்ற பாடத்தை உணர்த்தியது. அதன் பிறகு தங்கள் வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டிய ஆசைகள் குறித்து இருவரும் பேசினர். கணவர் உலகம் சுற்ற வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் டான், "நான் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவராக வேண்டும்" என்று உறுதியாகக் கூறினார்.

தனது ஓய்வூதிய சேமிப்பை முழுமையாகப் பயன்படுத்தி, கரீபியன் தீவுகளில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மருத்துவப் பள்ளியில் அவர் சேர்ந்தார். முதல் வருடத்தில் உயிர்வேதியியல் தேர்வில் அவர் தோல்வியடைந்தபோது, மனமுடைந்து படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடலாம் என நினைத்தார். ஆனால், அவரது கணவரும், பேரன்-பேத்தி வயதிலிருந்த அவரது கல்லூரி நண்பர்களும் அவருக்கு முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினர். கடற்கரையில் ஒன்றாக யோகா செய்வது, குழுவாக அமர்ந்து படிப்பது என தனது இளம் வகுப்புத் தோழர்களோடு ஒன்றிணைந்து தனது படிப்பைத் தொடர்ந்தார்.

சிகாகோ, மேற்கு வர்ஜீனியா மற்றும் தெற்கு டெக்சாஸ் ஆகிய இடங்களில் அவர் தனது மருத்துவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். டெக்சாஸில் அவர் பயிற்சி பெற்ற போது, அங்குள்ள ஒரு மூத்த மருத்துவர் அவரது திறமையைப் பார்த்து, "உங்களுடைய இந்த மருத்துவப் பட்டம் வெறுமனே வீட்டில் வைக்கும் ஒரு கண்காட்சிப் பொருள் அல்ல, நீங்கள் கட்டாயம் ஒரு மருத்துவராகப் பணி செய்ய வேண்டும்" என்று ஊக்கப்படுத்தினார்.

இதன் விளைவாக, இந்த மே மாத இறுதியில் தனது 72 வயதில் மருத்துவப் பட்டத்தைப் பெறவுள்ளார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை; ஜூலை மாதம் முதல் மிச்சிகனில் உள்ள டிரினிட்டி ஹெல்த் மெடிக்கல் சென்டரில் தனது மூன்று வருட மருத்துவப் பயிற்சியையும் தொடங்கவுள்ளார். "மருத்துவத் துறையில் பணிபுரியும் போதுதான் நான் முழுமையாக உயிருடன் இருப்பதை உணர்கிறேன்" என்று கூறுகிறார் நான்கு குழந்தைகளுக்குத் தாயும், மூன்று குழந்தைகளுக்குப் பாட்டியுமான டாக்டர் டான்.

டான் சூட்கீஸ்ட்-கிராஃப்ட்
டான் சூட்கீஸ்ட்-கிராஃப்ட்

டாக்டர் டான் சூட்கீஸ்ட்டின் இந்தப் பயணம், ஏதோ ஒரு காரணத்திற்காகத் தங்கள் கனவுகளைத் தள்ளி வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மாபெரும் உந்துசக்தி. நேரம் கடந்துவிட்டது என்று நாம் நினைக்கும் போதுதான், புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான கதவுகள் திறக்கின்றன என்பதை இவரது வாழ்வு உணர்த்துகிறது. இவருக்கு வாழ்த்துகள் சொல்லி விடாமுயற்சியுடன் வயது தடையின்றி இளமையான மனதுடன் எதையும் கற்க நாமும் துணிவோம்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User