அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

Mar 27, 2026 - 13:02
 0
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது பொருளாதார கொள்கை உலக நாடுகளை மட்டுமல்லாது அமெரிக்காவையும் பாதித்து இருக்கிறது. தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்தி வரும் போர் காரணமாக டொனால்டு ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250வது ஆண்டை கொண்டாடும் விதமாக புதிய டாலர் கரன்சியை வெளியிட இருக்கிறது. இந்த கரன்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. தற்போது டாலரில் கருவூல செயலாளர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோர் கையெழுத்து இடம் பெற்று இருக்கிறது.

இதில் கருவூல பொருளாளர் கையெழுத்தை நீக்கிவிட்டு அதில் ட்ரம்ப் தனது கையெழுத்தை பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 1861ம் ஆண்டுதான் டாலர் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன் பிறகு அதிபர் கையெழுத்து டாலரில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக 100 டாலர் கரன்சியில் ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. படிப்படியாக மற்ற கரன்சிகளிலும் இந்த கையெழுத்து விரிவுபடுத்தப்படும். இது குறித்து கருவூல செயலாளர் பெசென்ட் கூறுகையில், ''இந்த நடவடிக்கை 250வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்படுகிறது. அதிபர் ட்ரம்பின் தலைமையின் கீழ், நாங்கள் நிதி வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இருக்கிறோம்.

நமது பெரிய நாடு மற்றும் அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்பின் வரலாற்று சாதனைகளை அங்கீகரிக்க அவரது பெயரைக் கொண்ட அமெரிக்க டாலர் பில்களை விட சக்திவாய்ந்த வழி எதுவுமில்லை''என்று தெரிவித்தார். டொனால்டு ட்ரம்ப் கையெழுத்துடன் கூடிய டாலர்களை அச்சடிக்கும் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் அவை புழக்கத்திற்கு வரும். ஏற்கனவே அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், அரசாங்க திட்டங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நாணயங்களில் அதிபரின் பெயரை வைக்க ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது..

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0