ஒரு வாக்கில் தோல்வி; பெரியகருப்பனின் புகார் - `ஆதாரம் இல்லை' தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

May 11, 2026 - 14:01
0
ஒரு வாக்கில் தோல்வி; பெரியகருப்பனின் புகார் - `ஆதாரம் இல்லை' தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்த சிவகங்கை - திருப்பத்தூர் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 பெரியகருப்பன்
பெரியகருப்பன்

அதில், `தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியுமே தவிர, ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இதையே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்கு, தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்ற புகாருக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட தபால் வாக்கை, வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது" என தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கை பெற்று, மறு எண்ணிக்கை நடத்தக் கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, தபால் வாக்குகள், தொகுதி எண், பெயருடன் தான் அனுப்பப்படுகின்றன. அதனால் தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User