பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் எவர்கிரீன் நினைவலை

Jun 18, 2026 - 19:00
0
பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் எவர்கிரீன் நினைவலை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்தை 1980களின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானையில் ஒரு டூரிங் டாக்கீஸில் எனது 8 வயதில் பார்த்ததிலிருந்து தொடங்குகிறது. பாரதிராஜாவிற்கும் எனக்குமான உறவு. எனது தந்தை இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்து வந்து அந்தத் திரைப்படத்தைப் பார்த்துத் திரும்பிய போது பாரதிராஜா பற்றி என் அப்பா ஏதேதோ கூறிக்கொண்டிருந்தார்.

எனக்கு நினைவில் நின்றது அத்திரைப்படத்தில் ஆண்டியார் பாடுகிறார் என்று தினத்தந்தியில் வரும் ஒரு பாத்திரத்தை இயக்குநர் ஒரு பாடலின் நடுவில் பயன்படுத்தியிருப்பார். முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே என்ற பாடலில். பின்னாளில் பதின்பருவத்தில் இளையராஜா இரசிகனான போது ஜென்சியின் குரலில் ஆயிரம் மலர்களே மலரட்டும் பாடலை Sony ஒலிநாடாவில் பதிந்து ரிப்பீட் மோடில் கேட்டதுண்டு. 1977 ஆம் ஆண்டு பதினாறு வயதினிலே, 1978இல் கிழக்கே போகும் இரயில் என்று தமிழ்த் திரையுலகில் கிராமத்துத் தென்றலாய் இளையராஜாவுடன் கைகோர்த்து நடந்து வந்த இயக்குநரை அடுத்து புதிய வார்ப்புகளில் பார்த்து ரசித்தேன்.

பாரதிராஜா

அத்திரைப்படத்தில் “உன்னோட இதயத்தைக் கொடுத்தால் தான் வாத்தியாரு குங்குமத்தைக் கொடுப்பாராம்” என்று அக்காலத்தில் பிரபலமாயிருந்த இரு வார இதழ்களை இணைத்து உருவாக்கப்பட்ட வசனம் மிகவும் கவனிக்கப்பட்ட வசனம் ஆகும்.

கிராமத்துக் கதைகளோடு தொடங்கிய பாரதிராஜா திடீரென சிகப்பு ரோஜாக்கள் என்ற ரொமாண்டிக் திரில்லர் படத்தை எடுத்து தனது இன்னொரு பரிமாணத்தை நிரூபித்தார். புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் தனது உதவி இயக்குநர் பாக்யராஜை ஒரு கதாநாயகனாக அறிமுகப்படுத்தி தமிழ் திரையுலகில் பா வரிசை இயக்குநர்களில் ஒரு வாரிசுத் தொடர் உருவாகக் காரணமாயும் இருந்தார். பின்னாளில் பாக்யராஜின் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் தமிழ்த்திரையுலகில் ஒரு வெற்றிகரமான இயக்குநர் வரிசையாய் அமைந்தனர்.

எனது கல்லூரி வயதில் வந்த கொடி பறக்குது பார்த்து விட்டு வந்து தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரியில் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர் தேனப்பன் பாரதிராஜாவின் அருமை பெருமைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். நிழல்கள் போன்ற அற்புதமான திரைப்படத்தை மக்கள் கொண்டாடாமல் இருந்த போது அத்திரைப்படத்தைத் தமிழ்ப் பேராசிரியர்களைக் கொண்டு திறனாய்வு செய்ய வைத்து வீதி வீதியாக ரிக்சாக்களில் ஒலிவாங்கியில் அத்திரைப்படத்தின் காட்சிகள் பற்றி அவர்களைக் கொண்டே விவரிக்க வைத்திருந்தாராம்.

“வாலிபமே வா…வா…” என்ற ஒரு மசாலா திரைப்படத்தை இயக்கிய போது அதை தமிழ்த் திரையுலகம் கடிந்து கொண்டதாம். இனி இன்னொரு முறை இப்படியான படங்களை இயக்க மாட்டேன் என்று உறுதியளித்திருந்த பாரதிராஜா இன்னுமொரு முறை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து “கொடி பறக்குது” படம் மூலம் மற்றொரு மசாலா திரைப்படத்தை வெளியிட்டதில் எங்கள் பேராசிரியர் தேனப்பன் அவர்களுக்கு மிகுந்த வருத்தம்.

நிழல்கள்

நிழல்கள் திரைப்படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடலாம். அக்கால இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலித்த திரைப்படம். அது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற திரைப்பாடலின் மூலம் கவிஞர் வைரமுத்துவை அறிமுகம் செய்து பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து என்ற ஒரு வெற்றிக்கூட்டணிக்கு வித்திட்டவர். இன்று வரை அத்திரைப்படத்தில் ஆசிரியராக நடித்திருந்த இரவி “நிழல்கள்” இரவி என்றே அறியப்படுகிறார். அத்திரைப்படத்தின் பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக பல அலைவரிசைகளில் நீங்கா இடம் பெற்றவையாக இன்னும் திகழ்கின்றன.

காதல் டூயட் பாடல்களில் வெள்ளை உடை தேவதைகள் இடம் பெற்றதும் இவரது கற்பனையின் விளைவே. அது பல காலம் வரை தமிழ்த் திரையுலகை ஆட்டிப்படைத்தது. ஆர் வரிசைக் கதாநாயகிகள் பாரதிராஜாவின் மற்றொரு கொடை. ராதிகா, ரதி, ராதா, ரேகா போன்றோர் பாரதிராஜாவின் அறிமுகத்தில் திரைக்கு வந்து தமிழ்நாட்டில் பல தசாப்தங்களுக்கு நிலை பெற்றவர்கள். கமல்ஹாசனும் 16 வயதினிலே தொடங்கி, சிகப்பு ரோஜாக்கள், டிக்…டிக்.. டிக், ஒரு கைதியின் டைரி என்று நான்கு திரைப்படங்களில் இயக்குநருடன் தொடர்ந்தார். அனைத்துமே குறிப்பிடத்தக்க வெற்றித் திரைப்படங்கள்.

நடிகை ரேவதி மண் வாசனை தொடங்கி புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி ஆகிய திரைப்படங்களில் முத்திரை பதித்தார். நடிகை இராதா அலைகள் ஓய்வதில்லையில் தொடங்கி காதல் ஓவியம், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை என்று நடிப்பதற்கு வாய்ப்புள்ள பல படங்களில் தொடர்ந்தார்.

பாரதிராஜா

முதல் மரியாதையும், கடலோரக் கவிதைகளும் இயக்குநரின் திரைக்கவிதைகள் என அறுதியிட்டுக் கூறலாம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத காவியங்கள் அவை. வேதம் புதிது ஒரு மாற்றுப் பரிமாணத்தில் வந்த திரைப்படம். என்னைக் கேட்டால் இயக்குநரின் படங்களை வைத்து பல முனைவர் பட்ட ஆய்வுகள் கூட செய்யலாம்.

என் உயிர்த் தோழன் அரசியலில் அடிமட்டத் தொண்டர்கள் ஏமாற்றப்படும் விதத்தை அழகாகத் தந்த திரைக்காவியம். தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாபு என்ற அற்புதமான திரைக்கலைஞனை அறிமுகப்படுத்தியிருந்தார். பாவம் பாபு மற்றொரு திரைப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் நடைப்பிணமாக வாழ்ந்து மடிந்தார். என் உயிர்த்தோழனின் ஏ… இராசாத்தி பூச்சூடி வா.. வா. வா என்ற பாடல் இப்பொழுதும் டிரெண்டிங்கில் இருந்ததை அனைவரும் அறிந்திருப்போம்.

நாடோடித் தென்றலும் கருத்தம்மாவும் கூட இயக்குநரின் பிந்தைய கால காவியங்கள் தான். இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்கள் நான் இக்கட்டுரையில் கூறிய திரைப்படங்கள் அனைத்துமே என் மனதிற்கு நெருக்கமானவை. உயிரோடு உறவாடிய திரைக்கதைகள், கதாபாத்திரங்கள், இசை, பாடல்கள் என இன்னும் உயிர்ப்புள்ள படைப்புகள் அவை.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களை வைத்து இயக்குநர் இயக்கிய தமிழ் செல்வன் மற்றுமொரு சிறந்த படம். இயக்குநரின் அந்தி மந்தாரை படத்தை நான் இன்று வரை பார்க்கவில்லை. நிச்சயம் பார்க்க வேண்டும். தமிழ் செல்வனுக்குப் பிறகு அவர் தனது மகன் மனோஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்த இயக்கிய தாஜ்மஹால் திரைப்படத்தை கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.

தமிழ்த்திரையுலகின் போக்கினை தடம் மாற்றிய ஒரு இயக்குநர். திரையரங்கக் கூடங்களின் தளங்களுக்குள் முடங்கிக்கிடந்த ஒளிப்படக்கருவியை மக்கள் வாழ்வியலோடு இணைக்க தான் வாழ்ந்த கிராமங்களுக்கே கொண்டு சேர்த்த பெருமை மிகு படைப்பாளி, இரசனை மிக்க இயக்குநரின் மறைவு மீளாத்துயரம். அவரது படைப்புகள் இன்னும் நீண்ட காலம் வாழும்.

மகாலிங்கம் இரெத்தினவேலு,

விரிவுரையாளர்,

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,

பாலையம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User