தனியார் தொழிற்சாலையில் ஆய்வுக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ; 6 பிரிவுகளில் வழக்கு! - பின்னணி என்ன ?

Aug 24, 2026 - 11:31
0
தனியார் தொழிற்சாலையில் ஆய்வுக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ; 6 பிரிவுகளில் வழக்கு! - பின்னணி என்ன ?

புதுச்சேரியில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் சாய் ஜெ.சரவணகுமார். நான்கு ஆண்டுகள் அமைச்சராக இருந்த அவரை பதவியில் இருந்து இறக்கிய பா.ஜ.க தலைமை, தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவியை வழங்கியது.

அதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்ததால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு பா.ஜ.க சீட் வழங்கவில்லை. அதனால் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சாய் ஜெ.சரவணகுமார், திருபுவனை (தனி) தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய ஆதரவாளர்களுடன், அந்தப் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைக்கு ஆய்வு நடத்துவதற்காகச் சென்றிருக்கிறார் எம்.எல்.ஏ சாய் ஜெ.சரவணகுமார்.

வேர்ல்ஃபுல் தனியார் தொழிற்சாலை

ஆனால் அங்கிருந்த காவலாளிகள், நிர்வாகத்தின் அனுமதியின்றி இத்தனை பேரை தொழிற்சாலைக்குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கின்றனர். அப்போது எம்.எல்.ஏவுடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் அந்தக் காவலாளிகளை தாக்கிவிட்டு தொழிற்சாலைக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

அதையடுத்து எம்.எல்.ஏ-வுடன் பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சாலை நிர்வாகம், முன் அனுமதியின்றி எப்படி இத்தனை பேரை தொழிற்சாலைக்குள் அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. அதையடுத்து, இவர் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ… இவர் ஆய்வு நடத்துவதற்கு அனுமதி வாங்க வேண்டுமா? என்று எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் கேட்டிருக்கின்றனர். அதற்கு, `எம்.எல்.ஏ மட்டும் என்றால் பரவாயில்லை.

திடீரென இத்தனை பேரை எப்படி பணி நடக்கும் தொழிற்சாலைக்குள் எப்படி அனுமதிக்க முடியும்?' என்று தொழிற்சாலை தரப்பில் கேட்டிருக்கின்றனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அதன்பிறகு வெளியேறிய எம்.எல்.ஏ சாய் ஜெ.சரவணகுமார், ``தொழிற்சாலையில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கேட்பதற்காகவும் அங்கு சென்றேன். அவர்கள் வேலை தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேசமயம், ``எம்.எல்.ஏ சாய் ஜெ.சரவணகுமார் அவரது ஆதரவாளர்களுடன் அனுமதியின்றி தொழிற்சாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்" என்று காவல் நிலையத்தில் புகாரளித்தது அந்தத் தொழிற்சாலை நிர்வாகம்.

தவெக எம்.எல்.ஏ சாய் ஜெ. சரவணகுமார்

அந்தத் தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவுத் தலைவர் சிவராமகிருஷ்ணன் திருபுவனை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ``தொழிற்சாலைக்குள் நுழைந்த எம்.எல்.ஏவிடம், ஆய்வு நடத்த வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தோம். ஆனால் அதை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ, மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டி எங்களை மரியாதைக் குறைவாகப் பேசினார்.

அத்துடன் எங்கள் மனிதவள மேலாளரை நேரடியாக மிரட்டி, அவரை சும்மா விடமாட்டேன் என்றும், எங்கள் தொழிற்சாலையை இயங்கவிடாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டினார். அதையடுத்து, எங்கள் தொழிற்சாலைக்குள் சட்டவிரோத நடவடிக்கைகளும், போதைப்பொருள் விற்பனையும் நடைபெறுவதாக அவருக்கு சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, நான் இப்போது போகிறேன். ஆகஸ்ட் 26-ம் தேதி மறுபடி இதைவிட பெரிய கும்பலுடன் வருவேன்.

அன்று ஆய்வு நடத்துவதற்கான அனுமதியைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவரின் செயல்பாடு, தொழிற்சாலையின் அன்றாடச் செயல்பாடுகளை முற்றிலுமாக முடக்கியதுடன், எங்கள் ஊழியர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பெரிய கும்பலுடன் மீண்டும் வருவதாக வெளிப்படையாக அவர் அச்சுறுத்தியிருப்பது, அது எங்கள் ஊழியர்கள் மற்றும் எங்கள் சொத்துக்களின் தொடர்ச்சியான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறோம். எனவே தொழிற்சாலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அங்கு நடந்த அனைத்து சம்பவங்களும் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

புதுச்சேரி காவல்துறை

மேலும் கடந்த மாதம் இதே எம்.எல்.ஏ-வின் தனிப்பட்ட உதவியாளர் எங்கள் மூத்த மனிதவள மேலாளரை பலமுறை தொடர்பு கொண்டு, தனிப்பட்ட முறையில் சில உதவிகளையும், சலுகைகளையும் கேட்டார். அதை வழங்கவில்லை என்பதற்காகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட திருபுவனை போலீஸார், எம்.எல்.ஏ சாய் ஜெ.சரவணகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, சட்டவிரோதமாக கூடுதல் 189(2), அத்துமீறி நுழைதல் 329(3), ஆபாசமாகப் பேசுதல் 229(பி), தாக்குதல் 115(2), தொழிற்சாலையின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் 351(2), ஆதரங்களுடன் புகார்(190) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User