Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட் சரியாக இருக்குமா?!

Mar 20, 2026 - 08:01
 0
Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட்  சரியாக இருக்குமா?!

Doctor Vikatan: குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரைநோய்க்கான பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறோம். முந்தைய நாள் இரவும் சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் போட்டுக்கொண்டு, மறுநாள் காலையும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டுதான் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார் மருத்துவர். மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் டெஸ்ட் எப்படிச் சரியாக  இருக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

நீங்கள் ஏற்கெனவே சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர் என்றால், உங்கள் உடலுக்கு அந்த மாத்திரை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்பதே இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம். மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு டெஸ்ட் செய்தால்தான்,  நீங்கள் சாப்பிடும் மருந்து, உங்கள் ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் (Control) வைத்திருக்கிறதா அல்லது மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்பதைக் கணிக்க முடியும்.

சர்க்கரைநோய் என்பது ஒரு நாள் மட்டும் வரும் பிரச்னை அல்ல. மாத்திரையை ஒரு நாள் நிறுத்தினாலும் உடலில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும். நீங்கள் தினமும் மாத்திரை போடுபவர் என்பதால், அந்த மாத்திரையின் தாக்கத்தோடு உங்கள் உடல் எப்படி இயங்குகிறது என்பதை அறிவதே சரியான டெஸ்ட் ரிசல்ட்டாக இருக்கும். முந்தைய நாள் இரவு மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சர்க்கரை (Fasting) அளவு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். காலை உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கும் டெஸ்ட்டிற்கும், காலை மாத்திரை மிக அவசியம். அப்போதுதான் உணவு உண்ட பின் சர்க்கரை எவ்வளவு உயர்கிறது என்பதையும் மருந்து அதைக் கட்டுப்படுத்துகிறதா என்பதையும் பார்க்க முடியும்.

மாத்திரையை ஒரு நாள் நிறுத்தினாலும் உடலில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.

மாத்திரை போடாமல் டெஸ்ட் எடுத்து, சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டினால், மருத்துவர் உங்களுக்குத் தேவையில்லாமல்  கூடுதல் மாத்திரைகளையோ அல்லது இன்சுலினையோ பரிந்துரைக்க நேரிடும். இது உண்மையில் தவறான சிகிச்சைக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று சந்தேகம் வந்து, முதல்முறை டெஸ்ட் எடுக்கும்போதும், குறிப்பிட்ட காரணங்களுக்காக மாத்திரை போடாமல்  டெஸ்ட் எடுத்துப் பாருங்கள் என உங்கள் மருத்துவர் பிரத்யேகமாகச் சொல்லியிருந்தாலும் மட்டுமே  மாத்திரைகள் போடாமல் டெஸ்ட் செய்ய வேண்டும். மற்றபடி, சர்க்கரைநோய்க்கு வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு டெஸ்ட் செய்வதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0