தேர்தல் முடிந்துவிட்டது... அரசியல்வாதிகள் ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம்? - சில ரகளையான ஐடியாக்கள்

Apr 24, 2026 - 18:02
 0
தேர்தல் முடிந்துவிட்டது... அரசியல்வாதிகள் ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம்? - சில ரகளையான ஐடியாக்கள்

தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. மக்கள் இயல்புநிலைக்கு உடனே திரும்பிவிடுவார்கள். ஆனால், நம் அரசியல்வாதிகளின் நிலைமைதான் பாவம்! கடந்த சில மாதங்களாகக் கத்தித் தொண்டை வரண்டு, ஊர் ஊராகச் சுற்றிக் கால்கள் களைத்து, பூத் வாரியாகக் கணக்குப் போட்டு மூளை சூடாகிப் போயிருப்பார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமுக்குள் பாதுகாப்பாகத் தூங்கச் சென்றுவிட்ட நிலையில், ரிசல்ட் வரும் வரை அரசியல்வாதிகள் தங்கள் மனதுக்கும், தொண்டைக்கும், காலுக்கும் எப்படி ஓய்வு கொடுக்கலாம்? இதோ ரகளையான சில ஐடியாக்கள்

ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம் - ஏஐ படம்
ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம் - ஏஐ படம்

தொண்டைக்கு ஓய்வு

இத்தனை நாட்களாக, "என் உயிருனும் மேலான...", "அருமை நெஞ்சங்களே...", "சிந்தித்துப் பாருங்கள்..." என்று ஸ்பீக்கர்கள் கிழியக் கத்திய தொண்டைக்கு இப்போது முதல் உதவி தேவை.

அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் மௌன விரதம் இருக்கலாம். ஆனால், தவறுதலாக எந்தப் பொது நிகழ்ச்சிக்கோ, கல்யாணத்துக்கோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அனிச்சை செயலாக மைக்கைப் பிடித்து, மணமக்களைப் பார்த்து "இந்த மாபெரும் குடும்ப விழாவில் நீங்கள் அளிக்க வேண்டியது உங்களின் பொன்னான வாக்குகளை..." என்று உளறி வைக்க வாய்ப்புள்ளது.

கறுப்பு டீ, கிரீன் டீ குடித்துத் தொண்டையை இதமாக வைத்துக்கொள்ளலாம். கூடவே, எதிர் முகாம் வேட்பாளர் என்ன செய்கிறார் என்று உளவாளிகளிடம் போனில் கிசுகிசுக்காமல் இருப்பதும் தொண்டைக்குத் தரும் உண்மையான ஓய்வு.

காலுக்கு ஓய்வு

கேமரா ஆன் ஆனதும் சேறு, சகதி, சாக்கடை என்று பார்க்காமல் பாய்ந்து பாய்ந்து நடந்த கால்கள் அவை. வண்டியில் போகும்போதுகூட பாதி உடம்பை வெளியே தொங்கவிட்டு பேலன்ஸ் செய்த கால்களுக்கு இப்போது முழுமையான ஓய்வு தேவை.

இது ரொம்ப முக்கியம். சாலையில் நடக்கும்போது எதிரே யார் வந்தாலும் இரண்டு கைகளும் ஆட்டோமேட்டிக்காகக் கும்பிடு போடச் செல்லும். அதைத் தவிர்க்க, இரண்டு கைகளிலும் எப்போதுமே ஒரு வாட்டர் பாட்டிலோ அல்லது வளர்ப்பு நாயின் சங்கிலியையோ பிடித்துக் கொள்வது பாதுகாப்பானது.

ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம் - ஏஐ படம்
ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம் - ஏஐ படம்

மனதுக்கு ஓய்வு

தூக்கத்தில்கூட "12வது வார்டுல நமக்கு 500 ஓட்டு, 13வது வார்டுல அவனுக்கு 600 ஓட்டு..." என்று கூட்டல் கழித்தல் போட்டுக்கொண்டிருக்கும் மூளைக்கும் ரீசெட் அவசியம்.

நெட்ப்ளிக்ஸ், அமேசானில் படங்கள் பார்க்கலாம். ஆனால் `House of Cards', `Game of Thrones' போன்ற அரசியல், சதி சார்ந்த வெப் சீரிஸ்களைத் தவிர்த்துவிட்டு, `Tom and Jerry' அல்லது `Mr. Bean' போன்றவற்றை பார்ப்பது மனதுக்கு சாந்தம் தரும்.

மூளையை திசை திருப்ப சுடோகு விளையாடலாம். ஆனால், கட்டங்களில் 1 முதல் 9 வரை எண்களை நிரப்புவதற்குப் பதிலாக, பூத் ஏஜெண்டுகளின் பெயர்களை நிரப்பிக் கொண்டிருந்தால் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.

ரிசார்ட் ஓய்வு

`அது' வேற ரிசார்ட், `இது' வேற ரிசார்ட்! அரசியல்வாதிகளுக்கும் ரிசார்ட்டுகளுக்கும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் உண்டு. ஆனால், வழக்கமான அந்த ‘அரசியல் ரிசார்ட்’ பழக்கங்களை இப்போது மாற்ற வேண்டும்.

மாலத்தீவு, ஊட்டி, கொடைக்கானல் அல்லது மொரீஷியஸ் என்று எங்காவது குடும்பத்தோடு செல்லலாம். ஆனால் அங்கே போய், தங்கியிருக்கும் ஹோட்டல் கதவுகளை வெளியே பூட்டிவிட்டு, "யாரும் ரிசார்ட்டை விட்டு வெளியே போகக்கூடாது, எல்லாரோட செல்போனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க" என்று குடும்ப உறுப்பினர்களிடம் எம்.எல்.ஏ-க்களைப் போல நடந்துகொள்ளக்கூடாது.

ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம் - ஏஐ படம்
ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம் - ஏஐ படம்

மலைப்பகுதிகளுக்குச் சென்று இயற்கையை ரசிக்கலாம். ஆனால் அங்குள்ள மலையைப் பார்த்ததும் `அதை எப்படி ஆட்டையப் போடுவது’ என்றோ... ஒரு காடுகளைப் பார்த்தவுடன், `இங்கே ஒரு டாஸ்மாக் கட்டுனா எவ்வளவு கமிஷன் வரும்?’ என்றோ வியாபாரக் கணக்குப் போடாமல், அமைதியாகப் பறவைகளின் சத்தத்தைக் கேட்க வேண்டும்.

தேர்தல் முடிந்துவிட்டது. இனி மக்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை வாக்குப்பெட்டிகள் திறக்கும் நாளில்தான் தெரியும். அதுவரை, தேர்தல் என்ற வார்த்தையையே மறந்துவிட்டு, நமது அரசியல் தலைவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மக்களின் காதுகளுக்கும் மிகவும் நல்லது!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0