Doctor Vikatan: உடல் வீக்கம்... நீர் கோத்துக்கொள்வதுதான் காரணமா, கிட்னி செயலிழப்பாக இருக்குமா?
Doctor Vikatan: உடலில் நீர்கோத்துக் கொள்வது என்றால் என்ன.... அப்படி கோத்துக்கொள்வதால் என்ன பிரச்னைகள் வரும்... நீர் கோத்துக்கொள்வது என்பதை எப்படிப்பட்ட அறிகுறிகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம்... அதைத் தவிர்க்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

நீர் கோத்துக்கொள்வது என்பது உடலில் கை, கால்கள், முகம் என அனைத்தும் வீங்கிக் காணப்படுவதாகும். இதனை ஆங்கிலத்தில் 'அனசார்கா' (Anasarca) என்று சொல்வோம். உடலெங்கும் வீங்கிக் காணப்படும் இதில், தண்ணீர் கோத்திருப்பது நன்றாகத் தெரியும். இது கை வீக்கம், கால் வீக்கம் மற்றும் முக வீக்கமாக வெளிப்படும்.
பெரும்பான்மை நபர்களுக்கு கணுக்காலைச் சுற்றி வீக்கம் வரும். குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் 4 முதல் 10 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்தால் இந்த மாதிரி வீக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளது. பயணம் செய்ததால் வரும் வீக்கம், கால்களைச் சற்று உயரமாக வைத்துப் படுத்தால் மறுநாள் சரியாகிவிடும்.
அப்படிச் சரியாகாமல் கால்களும், முகங்களும் முழுமையாக வீங்கியிருந்தால் அது நீர் கோத்துக்கொள்ளும் பிரச்னையாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகளுடன் யாராவது வந்தால், மருத்துவர்களாகிய எங்களுக்கு முதலில் மனதிற்குள் தோன்றுவது சிறுநீரகம் (Kidney) வேலை செய்யவில்லையோ என்பதுதான். வீக்கம் மிகவும் மோசமாக இருந்து, அதாவது மூச்சு வாங்கும் அளவிற்கு இருந்தால், அது சிறுநீரகச் செயலிழப்பாக (Kidney Failure) இருக்கலாம். அத்துடன் நுரையீரலிலும் (Lungs) நீர் கோக்க ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

தேவையைப் பொறுத்து சிறுநீரகப் பரிசோதனை (Renal Function Test) செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். வீக்கம் உடலில் மட்டும்தான் இருக்கிறது என்றால், சிறுநீரகம் சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிய யூரியா (Urea), கிரியாட்டினின் (Creatinine), யூரிக் அமிலம் (Uric Acid) மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் (Electrolytes) ஆகியவை சரியாக உள்ளதா எனப் பரிசோதிப்போம்.
அடுத்து, கல்லீரலில் உள்ள என்சைம்கள் (Enzymes) சரியான அளவில் உள்ளதா எனப் பார்க்க கல்லீரல் பரிசோதனை (Liver Function Test ) பரிந்துரைக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட இரண்டும் சாதாரணமாக இருந்தால், ரத்த அணுக்களின் எண்ணிக்கை (Total Counts) பார்க்கப்படும். அதில் ஹீமோகுளோபின் (Hemoglobin) மிகவும் குறைவாக இருந்தால், தீவிர ரத்த சோகையால் (Severe Anemia) கூட சில நேரங்களில் இது போன்ற வீக்கம் வரலாம். இவற்றைத் தவிர, தைராய்டு குறைபாட்டாலும் (Hypothyroidism) உடலில் நீர் கோத்து வீக்கம் வரலாம்.
மேற்கூறிய பரிசோதனைகளில் எந்தப் பிரச்னையும் இல்லையென்றால், ஒரு நாள் அதிகமாக உப்பு (Salt) சாப்பிட்டதாலோ, அன்றைய தினம் சிறுநீரகம் சற்று மந்தமாகச் செயல்பட்டதாலோ, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்ததாலோ, அல்லது ஏற்கெனவே நீர் வெளியேறும் மாத்திரை சாப்பிடுபவர்கள் அதை திடீரென நிறுத்தியதாலோ கூட வீக்கம் வந்திருக்கலாம். இவர்களுக்கு முதலில் ஒரு நீர் மாத்திரை கொடுத்துப் பார்ப்போம். அதில் வீக்கம் குறைந்து சரியாகிவிட்டால், சிகிச்சையை அத்துடன் நிறுத்திவிடுவோம்.
மாத்திரை போட்டும் வீக்கம் குறையவில்லை என்றால், உடலிலிருந்து அதிக நீரை வெளியேற்றும் மாத்திரைகளைத் தொடர்ந்து தினமும் சாப்பிடப் பரிந்துரைப்போம்.

கல்லீரல் செயலிழப்பால் (Liver Failure) வீக்கம் வந்திருந்தால், காலை 8 மணிக்கு ஒரு மாத்திரை போடச் சொல்வோம். அதிலும் குறையவில்லை என்றால் மாத்திரையின் அளவை (Dose) கூட்டுவோம் அல்லது 6 மணி நேரம் கழித்து மதியம் 3 மணிக்கு மீண்டும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம்.
உடலில் இதுபோல நீர் கோத்துக்கொள்வதும், உடல் பருமன் போன்று வீக்கமாக இருப்பதும் சாதாரண விஷயமல்ல. அப்படி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம். இந்தப் பிரச்னை தொடர்ந்து இருந்தால், திரும்பத் திரும்பப் பரிசோதனைகள் செய்து கண்காணிப்பதும் மிகவும் அவசியம்.
டாக்டர் அருணாசலம்:
32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான டாக்டர் அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார். பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)