Doctor Vikatan: ஆஸ்துமா, இளைப்பு நோய் உள்ளவரா நீங்கள்... இப்படிச் சாப்பிட்டால் சமாளிக்கலாம்!

Nov 12, 2026 - 07:30
0
Doctor Vikatan: ஆஸ்துமா, இளைப்பு நோய் உள்ளவரா நீங்கள்... இப்படிச் சாப்பிட்டால் சமாளிக்கலாம்!

Doctor Vikatan: எங்கள் வீட்டில் மாமனார், மாமியார், இன்னும் சில உறவினர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. வானிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டாலே அவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு தீவிரமாகிவிடும். அவர்கள் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் என். சங்கரராமன்.

 நுரையீரல் சிகிச்சை மருத்துவர் என். சங்கரராமன்
நுரையீரல் சிகிச்சை மருத்துவர் என். சங்கரராமன்

ஆஸ்துமா எனும் மூச்சு இளைப்பு நோயாளிகளுக்கு உணவுக்கட்டுப்பாடு என்பது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். எந்த உணவைத் தவிர்ப்பது, எதைச் சேர்த்துக்கொள்வது போன்ற குழப்பத்தைத் தவிர்க்க, பொதுவான சில வழிகாட்டுதல்களை அறிந்துகொள்வது அவசியமாகும்.

வைட்டமின் சி நிறைந்த பழங்கள்: வைட்டமின் சி உணவுகள் இளைப்பு அபாயத்தைக் குறைக்கும். எனினும், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப்பழச் சாறுகளின் அதிக அமிலத்தன்மை காரணமாக சிலருக்குத் தொண்டை கட்டுதல் அல்லது இளைப்பு அதிகரிக்கலாம். சாதாரண நாள்களில் இவற்றை அறை வெப்பநிலையில் தயாரித்துக் குடிக்கலாம். வைரஸ் தொற்றால் இளைப்பு தீவிரமாகும்போது இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பால் மற்றும் பால் பொருள்கள்: பாலில் உள்ள 'கேசின்' புரதம் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தி இளைப்பை அதிகரிக்கலாம். பால் அலர்ஜி இல்லாதவர்கள் சாப்பிடலாம். எனினும் குளிர்ந்த பால் மற்றும் சுவையூட்டப்பட்ட பால் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. சூடான பால் ஒரு டம்ளர் வரை எடுத்துக்கொள்ளலாம்.

தயிர் மற்றும் மோர்: குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தயிர் மற்றும் மோரைத் தவிர்ப்பது நல்லது. புளிப்புச் சுவை இல்லாத ஃப்ரெஷ் தயிரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இளைப்பு அதிகமாக இருக்கும் காலத்தில் சில வாரங்களுக்கு தயிர், மோரைத் தவிர்ப்பது நலம்.

தண்ணீர் காய்கறிகள் மற்றும் இனிப்புகள்: பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் போன்ற தண்ணீர் காய்கறிகளை பச்சையாக உண்ணும்போது ஹிஸ்டாமினைச் சுரந்து சிரமத்தைத் தரும் என்பதால், வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. செயற்கை இனிப்பூட்டிகள் கோழைச் சுரப்பை அதிகரித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ந்த பால் மற்றும் சுவையூட்டப்பட்ட பால் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. சூடான பால் ஒரு டம்ளர் வரை எடுத்துக்கொள்ளலாம்.

மிளகு, பூண்டு மற்றும் அசைவம்: மிளகு, பூண்டு ஆகியவை சளியை வெளியேற்றி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். அசைவ உணவுகளில் அவித்த முட்டைகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகள் சுவாசக் குழாயின் திறனை மேம்படுத்தும்.

துரித உணவுகள் & குளிர் பானங்கள்: துரித உணவுகளில் உள்ள சல்பைட் (Sulphite) கூறுகள் அலர்ஜியை ஏற்படுத்தி ஆஸ்துமாவைத் தீவிரமாக்கும் என்பதால் அவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். குளிர் பானங்களை இரவில் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

உணவே மருந்து என்பத்திற்கேற்ப, சாதாரண நாட்களில் நன்மை தரும் சில பொருடள்கள் சுவாசப் பிரச்னை உள்ள நாள்களில் தொந்தரவு தரலாம். எனவே, அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதே சுவாசப் பிரச்னையைச் சரிசெய்யும் சிறந்த வழியாகும்.

டாக்டர்  என். சங்கரராமன்:

சென்னை,  ரேடியல் சாலையில் உள்ள  காவேரி மருத்துவமனையில்  கிளினிகல் லீட் & ஆலோசகர், இன்டர்வென்ஷனல் பல்மனாலஜி (நுரையீரல் மருத்துவம்)

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User