பறிபோகும் வேலை, அச்சத்தில் இளைஞர்கள்... கேள்விக்குறியாகும் இந்தியாவின் எதிர்காலம்?!

Apr 3, 2026 - 08:31
 0
பறிபோகும் வேலை, அச்சத்தில் இளைஞர்கள்... கேள்விக்குறியாகும் இந்தியாவின் எதிர்காலம்?!

சமீபத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று ஆயிரக் கணக்கான இந்திய இளைஞர்களின் கனவைத் தகர்த்துள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் பணிநீக்கம் செய்துள்ள 30,000 ஊழியர்களில் 12,000 பேர் இந்தியர்கள்.கடந்த சில ஆண்டுகளாகவே பல ஐ.டி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். 2025-ல் 2,45,953 பேர், 2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டுமே 85,156 பேர் என வேலை யிழந்துள்ளனர். ஐடி நிறுவனங்களின் இப்போக்கு, இந்திய இளைஞர்களின் எதிர்காலம் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு உலகமாகக் கருதப்பட்ட ஐ.டி துறை இன்று ஒவ்வொரு நாளையும் அச்சத்தோடு கடக்கிறது. ஏஐ, ஆட்டோமேஷன், செலவுக் கட்டுப்பாடு என இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் தயாராகி வருகின்றன. ஐ.டி மட்டுமல்ல, விவசாயம் முதல் பாதுகாப்பு அமைச்சகம் வரை எல்லா துறைகளிலும் ஏஐ அதிரடியாக நுழைந்து பணியாளர்களை பதிலீடு செய்யக் காத்திருக்கிறது.

ஆனால், ஒருவரது வேலையிழப்பு என்பது தனிநபரின் பிரச்னை மட்டுமல்ல, ஒரு குடும்பத்துக்கான பாதிப்பு. அவ்வகையில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வில் பல லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றன. இனியும் வேலை நீக்கங்கள் தொடரும் எனக் கூறப்படும் நிலையில், இது ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்துக்கும் எழுப்பப்படும் எச்சரிக்கையாகவே தெரிகிறது.

வேலை உறுதி இல்லாத சமூகத்தில் சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். வேலை இழப்பு, வருமானமின்மை, கடன் சுமை, எதிர்காலத்தின் மீதான பயம் என இவையெல்லாம் இளைஞர்களின் மனதைச் சிதைத்துவிடும் அபாயம் உள்ளது. இளைஞர் சமுதாயம் அமைதி இழந்தால் என்னவாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏ.ஐ காரணமாக ஆயிரக்கணக்கானோரின் வேலை பறிபோகும் அதேநேரம், 2026-க்குள் 10 லட்சம் ஏ.ஐ திறன் கொண்ட பணியாளர்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார்கள் என்கிறது NASSCOM-ன் தரவு. ஆனால், இந்தத் தேவையில் இந்தியர்களின் ஏ.ஐ திறன் 20% அளவுக்குக்கூட இல்லை. இந்த இடைவெளியை உணர்ந்து அரசும், அதிகாரிகளும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், வேலை இழந்த இளைஞர்களுக்கான உடனடி பாதுகாப்பு என்ன? நிறுவனங்களின் பெரிய அளவிலான பணி நீக்கங் களுக்குக் கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறை விதிகள் என்ன? நம் கல்வி அமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் நடக்கின்றனவா? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தேடவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

தொடர்ந்து வெளியாகிவரும் வேலை நீக்க அறிவிப்புகளை ஒரு சாதாரண தினசரி செய்தியாகக் கடந்து செல்லப் போகிறோமா அல்லது ஒரு பெரிய சமூக நெருக்கடிக்கான ஆரம்பம் இதுவென்று உணர்ந்து செயல்படப் போகிறோமா என்பதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.

- ஆசிரியர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0