ரூ.500 ஓய்வூதியத்திற்காக மாமியாரை 9 கி.மீ தூரம் முதுகில் சுமந்து சென்ற மருமகள்! - சத்தீஷ்கர் அவலம்

May 25, 2026 - 10:31
0
ரூ.500 ஓய்வூதியத்திற்காக மாமியாரை 9 கி.மீ தூரம் முதுகில் சுமந்து சென்ற மருமகள்! - சத்தீஷ்கர் அவலம்

சத்தீஷ்கர் மாநிலத்தில், மாநில அரசு முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 500 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதிய தொகையை பெற வங்கிகள் பல நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்கிறது.

சத்தீஷ்கரில் உள்ள சுர்குஜா மாவட்டத்தில் இருக்கும் ஜன்கல்பாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுக்மானியா. இவரது மாமியாருக்கு 90 வயதாகிறது. ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் ஓய்வூதியம் சுக்மானியாவின் மாமியாருக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. திடீரென அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் சென்ட்ரல் பேங்க் நிர்வாகம் ஓய்வூதியத்தை கொடுக்க முடியாது என்றும், ஓய்வூதியம் பெறுபவர் நேரில் வந்து சுய விபரங்கள் அடங்கிய கே.ஒய்.சி தகவல்களை வழங்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.

சுக்மானியா தனது மாமியாருக்கு வயதாகிவிட்டதால் அவரால் வர முடியாது என்று சொன்னதற்கு அதனை வங்கி அதிகாரிகள் கேட்பதாக இல்லை.

இதனால் கடந்த 4 மாதங்களாக மூதாட்டிக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதையடுத்து வேறுவழியில்லாமல் சுக்மானியா தனது மாமியாரை வங்கிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வங்கிக்கு அழைத்து செல்ல ஆட்டோரிக்‌ஷாவிற்கு பணம் கொடுக்கும் அளவுக்கு சுக்மானியாவிற்கு வசதி இல்லை.

இதனையடுத்து சுக்மானியா தனது மாமியாரை முதுகில் சுமந்தபடி வங்கியை நோக்கி நடந்தார். அவர் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் வங்கிக்கு நடந்தே சென்றார். அவ்வாறு நடந்து சென்றபோது ஒருவர் அதனை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. வீடியோ எடுத்த நபர் ஏன் சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, வங்கி ஊழியர் ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு வந்து ஓய்வூதியத்தை கொடுத்துவிட்டு செல்வார். ஆனால் கே.ஒய்.சி பிரச்னையால் வங்கி நிர்வாகம் 4 மாதங்களாக வீட்டிற்கு வந்து ஓய்வூதியத்தை கொடுக்கவில்லை.

எனவேதான் வங்கிக்கு சுமந்து செல்கிறேன் என்று குறிப்பிட்டார். சுக்மானியா வங்கிக்கு சென்று அதிகாரிகள் முன்னிலையில் கே.ஒய்.சியை ஆவணத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் 4 மாதத்திற்கான நிலுவைத்தொகையான ரூ.2 ஆயிரத்தை வங்கி நிர்வாகம் அந்த மூதாட்டியின் வங்கிக்கணக்கில் வரவு வைத்தது.

இது குறித்து உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரி குஷ்பூ கூறுகையில்,'' கடந்த ஜனவரி மாதம் வரை அந்த மூதாட்டிக்கு வீட்டிற்கு சென்று ஓய்வூதியம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆவண பிரச்னையால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஆவணங்கள் கொடுக்கப்பட்டு விட்டதால் அடுத்த மாதத்தில் இருந்து அவரது வீட்டிற்கே சென்று ஓய்வூதியத்தை வழங்குவார்கள்''என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User